Press "Enter" to skip to content

லா லிகா கால்பந்து : பார்சிலோனா அணி அபார வெற்றி

லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றது.

மாட்ரிட்:

20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா கிளப், வில்லார் ரியல் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பார்சிலோனா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3-வது நிமிடத்தில் பார்சிலோனா அணி வீரர் கிரிஸ்மான் கோலை நோக்கி அடித்த பந்தை வில்லார் ரியல் அணி வீரர் பாய் டாரெஸ் பதற்றத்துடன் தடுக்க அது சுய கோலாக மாறியது. 14-வது நிமிடத்தில் வில்லார் ரியல் அணி வீரர் ஜெரார்டு மொரினோ பதில் கோல் திருப்பினார்.

20-வது நிமிடத்தில் பார்சிலோனா அணி வீரர் லூயிஸ் சுவாரஸ் பந்தை கோலுக்குள் திணித்தார். 45-வது நிமிடத்தில் மெஸ்சி கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் கிரிஸ்மான் கோலாக மாற்றினார். முதல் பாதியில் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்பாதியிலும் பார்சிலோனா அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. 87-வது நிமிடத்தில் பார்சிலோனா அணி வீரர் அன்சு பாட்டி கோல் அடித்தார். முடிவில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வில்லார் ரியலை வீழ்த்தி அபார வெற்றியை ருசித்தது. கடந்த 2 ஆட்டங்களில் ‘டிரா‘ கண்டதால் சரிவை சந்தித்து இருந்த பார்சிலோனா அணி இந்த வெற்றியின் மூலம் எழுச்சி பெற்றுள்ளது. முன்னதாக நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் கிளப்பை வீழ்த்தியது.

நேற்றைய லீக் ஆட்டங்கள் முடிவில் ரியல் மாட்ரிட் அணி 34 ஆட்டங்களில் விளையாடி 23 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 77 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தொடருகிறது. பார்சிலோனா அணி 34 ஆட்டங்களில் ஆடி 22 வெற்றி, 7 டிரா, 5 தோல்வியுடன் 73 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. வில்லார் ரியல் அணியை வீழ்த்தி 3 புள்ளிகள் பெற்றதன் மூலம் பார்சிலோனா கிளப் அணி சாம்பியன் பட்ட வாய்ப்பில் நீடிக்கிறது.

இதற்கிடையில் அடுத்த ஆண்டுடன் பார்சிலோனா கிளப்பில் இருந்து அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி விலக முடிவு செய்து இருப்பதாக வெளியான தகவலை பார்சிலோனா கிளப்பின் தலைவர் ஜோசப் மரியா பார்டோமி மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பார்சிலோனா அணியோடு தான் தனது கால்பந்து வாழ்க்கையை முடித்து கொள்வேன் என்று ஏற்கனவே மெஸ்சி பலமுறை தெரிவித்து இருக்கிறார். மெஸ்சி பார்சிலோனா கிளப் அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்புகிறார். அத்துடன் இந்த கிளப்புடன் தான் தனது கால்பந்து வாழ்க்கையை முடித்து கொள்ளவும் ஆசைப்படுகிறார். அவருக்கு இன்னும் பல ஆண்டுகள் எஞ்சி இருக்கின்றன’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »