Press "Enter" to skip to content

டோனி ஓய்வு பெற திட்டமா?- மேனேஜர் விளக்கம்

டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு அவரது மேனேஜரும், நண்பருமான மிஹிர் திவாகர் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய விக்கெட் கீப்பர் டோனி அதன் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஐ.பி.எல். போட்டியின் மூலம் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக அந்த போட்டி காலவரையின்றி தள்ளிப்போடப்பட்டு இருப்பதால் டோனியின் மறுபிரவேசம் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் டோனி தனக்கு சொந்தமான தோட்டத்தில் இயற்கை விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் 39 வயதான டோனியின் எதிர்கால திட்டம் என்ன? என்பது குறித்து அவரது மேனேஜரும், நண்பருமான மிஹிர் திவாகரிடம் கேட்ட போது, ‘நண்பர்களான நாங்கள் அவரது கிரிக்கெட் குறித்து பேசுவது கிடையாது. ஆனால் அவரை பார்க்கும் போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்த மாதிரி தெரியவில்லை. ஐ.பி.எல். போட்டியில் விளையாட அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதற்காக உண்மையிலேயே கடுமையாக உழைத்தார். ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே அவர் சென்னை சென்று தனது பயிற்சியை தொடங்கியது எல்லோருக்கும் தெரியும். தனது பண்ணை வீட்டில் அதிக நேரத்தை செலவிட்டு வரும் டோனி உடல் தகுதியை நன்றாகவே பேணி வருகிறார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் அவர் பயிற்சியை தொடங்குவார். தற்போது எவ்வளவு வேகமாக இயல்பு நிலை திரும்புகிறது என்பதை பொறுத்தே எல்லாம் அமையும்’ என்று தெரிவித்தார்.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »