Press "Enter" to skip to content

டெக்கான் சார்ஜர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.4,800 கோடி வழங்க உத்தரவு: பிசிசிஐ-க்கு பின்னடைவு

இந்திய கிரிக்கெட் வாரியம் டெக்கான் சார்ஜர்ஸ் நிறுவனத்திற்கு 4800 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று நடுவர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டியில் விளையாடிய அணிகளில் ஒன்று டெக்கான் சார்ஜர்ஸ்.

 ஐதராபாத் நகரை மையமாக கொண்ட இந்த அணி, 2008-ம் ஆண்டு முதல் 2012 வரை விளையாடியது.

2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல். போட்டியில், டெக்கான் சார்ஜஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 

2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி ஐ.பி.எல். போட்டியில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்டது.

வங்கி உத்தரவாத தொகையான ரூ.100 கோடியை செலுத்த தவறியதால், அந்த அணியை கிரிக்கெட் வாரியம் நீக்கியது. கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தை மீறியாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஐ.பி.எல்.லில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளரான டி.சி.எச்.எல். நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 

மும்பை ஐகோர்ட்டின் உத்தரவுபடி நடுவர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சி.கே. தாக்கர் இந்த வழக்கை விசாரித்தார். அவர் இந்த வழக்கில் ‘‘ஐ.பி.எல்.லில் இருந்து டெக்கான் சார்ஜஸ் அணி நீக்கப்பட்டது சட்ட விரோதமானது’’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும், ‘‘டெக்கான் சார்ஜஸ் நிறுவனத்துக்கு ரூ.4,814.67 கோடியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வழங்க வேண்டும். 2012-ல் இருந்து 10 சதவீத வட்டியை கொடுக்கவும்’’உத்தரவிட்டுள்ளார்.

நடுவர் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »