Press "Enter" to skip to content

மான்செஸ்டர் தேர்வில் வெற்றி: பென் ஸ்டோக்ஸ்-க்கு கேப்டன் ஜோ ரூட் பாராட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் வெற்றி பெற காரணமாக இருந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்-க்கு இங்கிலாந்து கேப்டன் ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2- வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நடந்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 469 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 287 ரன்னில் ‘ஆல் அவுட் ‘ ஆனது.

 182 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 4-வது நாள்  ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் 16 ரன்னும், கேப்டன் ஜோ ரூட் 8 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 219 ரன்கள் முன்னிலை, கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது.

இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 312 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 57 பந்தில்  4 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன் (அவுட் இல்லை) எடுத்தார்.

312 ரன் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டான  புரூக்ஸ் – பிளாக்வுட் ஜோடி சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் அடித்தனர்.

 தேனீர் இடைவேளைக்கு முன்பு இந்த ஜோடி பிரிந்தது. பிளாக்வுட் 55 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் எஞ்சிய வெஸ்ட்இண்டீஸ் விக்கெட்டுகள் எளிதில் சரிந்தன. புரூக்ஸ் 62 ரன்னில் 7-வது விக்கெட்டாக  ஆட்டம் இழந்தார். அந்த அணி 70.1 ஓவர்களில் 198 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 113 ரன்னில் அபார வெற்றி பெற்றது.

ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், டாம் பெஸ் தலா 2 விக்கெட்டும், சாம் கரண் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த டெஸ்டில் 254 ரன்கள் ( 176+78)  குவித்து ,3 விக்கெட் சாய்த்த பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். அவர் 2- இன்னிங்சில் 36 பந்தில் அரைசதம் அடித்து இங்கிலாந்து வீரர்களில் சாதனை படைத்தார்.

இந்த வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியதாவது:-

பென் ஸ்டோக்ஸ் பாராட்டுக்குரியவர். அவர் நம்ப முடியாத அபாரமான வீரர். உண்மையிலே அவருக்கு வானமே இல்லை என்று நினைக்கிறேன்.

இவ்வாறு ஜோ ரூட் தெரிவித்தார்.

இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக சாம்பியன்ஷிப் போட்டியாகும். வெற்றி மூலம் இங்கிலாந்துக்கு 40 புள்ளிகள் கிடைத்தது. அந்த அணி 186 புள்ளியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. வெஸ்ட் இண்டீஸ் 40 புள்ளியுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

இந்தியா (360) முதலிடத்திலும், ஆஸ்திரேலியா (296) 2-வது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து பாகிஸ்தான, இலங்கை  4 முதல் 6-வது இடங்களிலும், தென் ஆப்பிரிக்கா வங்காளதேசம் 8 மற்றும் 9-வது இடங்களிலும் உள்ளன.

இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. முதல் டெஸ்டில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட்டில் வெற்றி பெற்று இருந்தது. தற்போது 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற  கணக்கில் சமநிலையில் உள்ளது.

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 24-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »