Press "Enter" to skip to content

ஒரு பந்திற்கு 4 ஷாட் வைத்திருப்பார்: நான் பார்த்ததிலேயே அவர்தான் மிகவும் கடினமான பேட்ஸ்மேன்- அனில் கும்ப்ளே

நான் பந்து வீசியதிலேயே மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என்றால் அவர் பிரையன் லாராதான் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளீதரன், ஷேன் வார்னேவுக்கு பின் அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய 2-வது வீரர் என்ற அரிய சாதனைப்படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

18 ஆண்டுகள் கிரிக்கெட் களத்தை கலங்கடித்தவர் அனில் கும்ப்ளே. அவர் பந்து வீசிய காலத்தில் பல தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் ஆடி வந்தனர். ரிக்கி பாண்டிங், கல்லீஸ், குமார் சங்ககாரா, இன்சமாம் உல் ஹக், சயீத் அன்வர், பிரையன் லாரா என பலருக்கு எதிராக பந்து வீசி உள்ளார்.

பல சமயங்களில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு திருப்பம் அளித்து இருக்கிறார் அனில் கும்ப்ளே. அவரது அனுபவத்தின் காரணமாக 2007-08 காலகட்டத்தில் இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அந்த சமயத்தில் பல முக்கிய வெற்றிகளை பதிவு செய்து இருந்தது இந்திய அணி.

அனில் கும்ப்ளே தான் பந்து வீசியதில் மிகவும் கடினமான பேட்ஸ்மேன் யார் என்பது பற்றி கூறி உள்ளார். அந்த குறிப்பிட்ட பேட்ஸ்மேன் ஒவ்வொரு பந்துக்கும் நான்கு வகையான ஷாட் வைத்திருப்பார் என்றும் கூறி தன் வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில், ‘‘பல பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவது கடினமாக இருந்துள்ளது. அதில் உச்சகட்டம் பிரையன் லாராதான்றார். லாரா நீங்கள் பந்துவீசும் ஒவ்வொரு பந்துக்கும் நான்கு வகையான ஷாட் வைத்திருப்பார். அதுதான் மிகப்பெரிய சவால். அவரை வீழ்த்த முடியும், அவுட் ஆக்க முடியும் என நினைப்போம். ஆனால், அவர் தன் ஷாட்டை மாற்றி ‘3rd man’ திசையில் பந்தை தட்டி விடுவார்’’ என்றார்.

அனில் கும்ப்ளே பிரையன் லாராவிற்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அதில் ஐந்து முறை அவரை வீழ்த்தி உள்ளார். 2002 டெஸ்ட் போட்டி ஒன்றில் தன் தாடையில் காயம் ஏற்பட்டபோது கட்டு போட்டுக்கொண்டு வந்து அவரது விக்கெட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஸ்மன், சேவாக் போன்றோர் தன் அணியை சேர்ந்தவர்கள் என்பதால் நல்ல வேளையாக அவர்களுக்கு பந்து வீசும் நிலை தனக்கு வரவில்லை என்றார்.

அவர்களுக்கு வலைப்பயிற்சியில் மட்டுமே பந்து வீசுவேன். போட்டிக்கு முந்தைய தினம் மாலை அவர்களுக்கு எப்படி பந்து வீசுவது என சிந்திக்கும் நிலை தனக்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டார். 

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »