Press "Enter" to skip to content

ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ தகவலை பெற்றோம்: எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ தகவலை பெற்றோம் என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

இந்திய பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20-யின் இந்த வருடத்திற்கான தொடர் கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. அப்போதிலிருந்தே ஐக்கிய அரபு அமீரகம் ஐபிஎல் தொடரை நாங்கள் நடத்த தயாராக இருக்கிறோம் என்று கூறி வந்தது.

ஆனால் ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த விரும்புகிறோம், கடைசி முயற்சிதான் வெளிநாட்டு மண்ணில் நடத்துவது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.

இருந்தாலும் ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக தாங்களாகவே தயார்படுத்திக் கொண்டு தயார் நிலையில் இருக்கிறோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதும், செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் 8-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்தியாவிடம் இருந்து போட்டியை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ தகவலை நாங்கள் இன்னும் பெறவில்லை என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது. இதனால் உடனடியாக பிசிசிஐ அதற்கான வேலைகளை துரிதப்படுத்தியது.

இந்நிலையில் இந்தியாவிடம் இருந்து ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான விருப்பக் கடிதத்தை பெற்றுள்ளோம் என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது இதன்மூலம் உறுதியாகிவிட்டதால், அதற்கான வேலைகளை செய்ய எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு தயாராகி உள்ளது.

போட்டிக்கான ஏற்பாடு குறித்து ஐக்கிய அரபு எமீரேட்ஸ் கிரிக்கெட் போர்டின் பொது செயலாளர் உஸ்மானி கூறுகையில் ‘‘உலகின் மிக உற்சாகமான, பிரபலமான மற்றும் பணக்கார போட்டியை நடத்துவதற்கான செயல்பாடுகள் மற்றும் தளவாடங்களை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன.

மக்களை நகர்த்துவது, பொருட்களை கொண்டு செல்வது போன்ற முக்கியமான வேலைகள் உள்ளன. நாங்கள் வல்லுனர்களை கொண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியுள்ளது.

அபுதாபி, துபாய், சார்ஜா ஸ்போர்ட்ஸ் கவுன்சில், சுற்றுலாத்துறை, சுகாதாரத்துறை, போலீஸ் என அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து வேலை செய்து, சிறப்பாக போட்டியை நடத்த வேண்டும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »