Press "Enter" to skip to content

அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து விலகினார் நடால் – இந்திய வீரர் சுமித் நாகலுக்கு அதிர்ஷ்டம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஸ்பெயின் வீரரான நடப்பு சாம்பியன் நடால் விலகினார்

மாட்ரிட்:

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நடக்கிறது. அமெரிக்காவை கொரோனா புரட்டிப்போட்டாலும் இந்த போட்டி திட்டமிட்டபடி நடத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு உயிர்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி அரங்கேறப்போகும் இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரபெல் நடால் திடீரென விலகியுள்ளார்.

34 வயதான நடால் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. நிலைமை இன்னும் கட்டுக்குள் வந்தது மாதிரி தெரியவில்லை. இதனால் நீண்ட யோசனைக்கு பிறகு விருப்பமின்றி அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறேன். இந்த விஷயத்தில் எனது மனது சொல்வதை பின்பற்றி இந்த முறை அமெரிக்காவுக்கு செல்வதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே 5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கால்முட்டி காயத்தில் இருந்து குணமடைய எஞ்சிய சீசன் முழுவதும் ஓய்வு எடுக்கப்போவதாக கூறிவிட்டார். கொரோனா அச்சத்தால் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, பிரான்சின் மான்பில்ஸ், ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ் உள்ளிட்டோரும் அமெரிக்க ஓபனில் இருந்து பின்வாங்கி விட்டனர். பாதுகாப்பு கருதி கடைசி நேரத்தில் மேலும் சிலர் ‘ஜகா’ வாங்கலாம்.

ஜாம்பவான்களான பெடரரும், நடாலும் ஒரே நேரத்தில் ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இல்லாமல் போவது 1999-ம் ஆண்டு அமெரிக்க ஓபனுக்கு பிறகு இதுவே முதல்முறை என்பது நினைவு கூரத்தக்கது.

இதற்கிடையே, பிரபல வீரர்களின் விலகலால் இந்திய வீரர் சுமித் நாகலுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவர் தகுதி சுற்று இன்றி நேரடியாக பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். டெல்லியில் வசிக்கும் 22 வயதான நாகல் தரவரிசையில் 127-வது இடம் வகிக்கிறார்.

அவர் கூறுகையில், ‘கடினமான சூழலிலும் அமெரிக்க ஓபனை நடத்த போட்டி அமைப்பாளர்கள் எடுத்து வரும் தீவிரமான முயற்சி பாராட்டுக்குரியது. அமெரிக்க ஓபனில் நேரடியாக முதல் சுற்றில் ஆடும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அங்கு சென்று விளையாடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து பயிற்சியாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வேன். அங்கு எப்படி செல்லப்போகிறேன் என்பது தெரியவில்லை. யாருக்கு தெரியும், ஒரு வேளை இந்த போட்டி ரத்து செய்யப்படலாம்’ என்றார்.

கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் தகுதி சுற்றுகளில் வெற்றி கண்டு அதன் மூலம் முதல் ரவுண்டில் ரோஜர் பெடரை எதிர்கொண்ட சுமித் நாகல், அதில் முதல் செட்டை கைப்பற்றி அடுத்த 3 செட்டுகளை பறிகொடுத்து தோற்றது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »