Press "Enter" to skip to content

இந்தியா – இங்கிலாந்து சோதனை தொடரை நடத்த ஆர்வம் காட்டும் இலங்கை

இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த இலங்கை கிரிக்கெட் போர்டு ஆர்வம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அதிக அளவில் பாதித்துள்ளன. இந்தியாவில் மார்ச் மாதத்திற்குப்பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை என்றால், இந்தியா சகஜ நிலையை அடைய நீண்ட மாதங்கள் ஆகலாம்.

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலககோப்பையை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியவில்லை என்றால் ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையை மாற்று இடமாக தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இங்கிலாந்து அணி அடுத்த வருடம் தொடக்கத்தில் இந்தியா வந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்த முடியவில்லை என்றால், நாங்கள் தொடரை நடத்த தயாராக இருக்கிறோம் என்று இலங்கை கிரிக்கெட் போர்டு ஆர்வம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து அணி இலங்கை சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சென்றிருந்தது, கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் இங்கிலாந்து தொடரை ரத்து செய்து உடனடியாக சொந்த நாடு திரும்பியது.

இந்த டெஸ்ட் தொடர் அடுத்த வருடம் தொடக்கத்தில் மீண்டும் நடக்க இருக்கிறது. அப்போது தொடர்ந்து இங்கிலாந்து இலங்கையில் தங்கி இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட முடியும் என இலங்கை கிரிக்கெட் போர்டு கருதுகிறது.

ஆனால் இந்திய அணிக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையிடம் இருந்து அப்படி ஒரு பரிந்துரை வரவில்லை என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »