Press "Enter" to skip to content

2023 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட வேண்டும் – ஸ்ரீசாந்த் விருப்பம்

2023 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட வேண்டும் என்பதே தனது லட்சியம் என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதித்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீசாந்த் உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டால், அவரது தடைக்காலம் 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீசாந்தின் தடைக்காலம் கடந்த 13ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து அவர் மீண்டும் களமிறங்க தீர்மானித்துள்ளார். கடந்த சில தினங்களாக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;-

“நான் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீரர் என்பது உண்மை தான். ஆனால் இப்போது நான் ஒரு புதுமுக வீரர் போல உணர்கிறேன். 7 வருடங்களுக்கு பிறகு விளையாட வருகின்ற போதிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் விளையாட அனுமதிக்க கோரி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் கிளப் அணிகளுக்காக விளையாட விரும்புகிறேன். இது தொடர்பாக பல்வேறு முகவர்களிடம் பேசி வருகிறேன். 2023 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »