Press "Enter" to skip to content

கோலி இல்லாதது இந்திய அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் – இயான் சேப்பல் கருத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சோதனை தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி பாதியில் தாயகம் திரும்பும் போது அது வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார்.

சிட்னி:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் முதலாவது சோதனை அடுத்த மாதம் 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் இணையதளம் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

இந்த கோடை கால தொடரின் குழப்பமான சூழல், கொரோனா தொற்று பரவலால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அட்டவணையில் ஏற்படுத்திய தாக்கம் போன்றவை சோதனை தொடரை இந்திய அணி மீண்டும் கைப்பற்றுவதற்கு அனுகூலமாக கூட அமையலாம். 14 நாட்கள் தனிமைப்படுத்துதலின் போது பயிற்சியில் ஈடுபட இந்திய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள இந்திய வீரர்களுக்கு இது கூடுதல் காலஅவகாசத்தை வழங்கியுள்ளது.

அதாவது ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் எந்த அளவில் (லென்த்) துல்லியமாக பந்து வீசினால் நன்றாக இருக்கும் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப இந்திய பவுலர்கள் ஆயத்தமாவதற்கும், வழக்கத்துக்கு மாறான பவுன்சர் பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட சமாளிக்க பழகிக்கொள்ளவும் இந்த கூடுதல் பயிற்சி நாட்கள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் பவுன்சர் பந்துகளில் தாக்குப்பிடிப்பது மட்டும் போதாது. அத்தகைய பந்துகளில் ரன்களும் குவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பவுன்சர் பந்துகளில் தடுமாற வேண்டியது தான்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சோதனை முடிந்ததும் இந்திய கேப்டன் விராட் கோலி குழந்தை பிறப்புக்காக தாயகம் திரும்பும் போது வீரர்களின் தேர்வில் இந்திய அணி நிர்வாகம் தர்மசங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கோலி இல்லாத போது இந்திய அணியின் மட்டையாட்டம் வரிசையில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கும். அதே சமயம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திறமையான இந்திய இளம் பேட்ஸ்மேன்கள் தங்களது முத்திரையை பதிக்க இது அருமையான வாய்ப்பாகும்.

இந்த தொடர் ஏற்கனவே பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருக்கிறது. இதில் இப்போது கூடுதலாக வீரர்கள் தேர்வு முக்கிய பங்காற்றப்போகிறது. யார் துணிச்சலான தேர்வாளர்கள் என்பது, அணியில் சரியான வீரர்களை தேர்வு செய்த பிறகு தான் தெரியும்.

ஆஸ்திரேலிய சோதனை அணியில் தொடக்க ஆட்டக்காரராக டேவிட் வார்னருடன் ஜோ பர்ன்சை இறக்குவதை விட புதுமுக வீரர் வில் புகோவ்ஸ்கிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கடந்த பருவத்தில் ஜோ பர்ன்ஸ் 2 அரைசதம் உள்பட 256 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். இதன் சராசரி 32 ஆக உள்ளது. இது ஒரு சோதனை பேட்ஸ்மேனின் சராசரிக்கு மிகவும் குறைவாகும்.

ஆனால் புகோவ்ஸ்கி உள்ளூர் போட்டியான ஷெப்பீல்டு கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் நொறுக்கியுள்ளார். இதில் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு இரட்டை சதங்கள் அடித்து சாதனை படைத்ததும் அடங்கும். சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு போதுமான திறமையை நிரூபித்து காட்டியுள்ளார். அவருக்கு வாய்ப்பு வழங்குவதற்கு இதுவே சரியான நேரமாகும்.

இவ்வாறு இயான் சேப்பல் கூறியுள்ளார்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »