Press "Enter" to skip to content

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் – சென்னையில் இன்று நடக்கிறது

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கிறது.

சென்னை:

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு அணி நிர்வாகமும், தக்கவைக்கப்பட்ட மற்றும் கழற்றிவிடப்பட்ட வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டன. ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அதிரடி ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணியும், மற்றொரு ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித்தை ராஜஸ்தான் அணியும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஆகியோரை பெங்களூரு அணியும் விடுவித்தன.

கேதர் ஜாதவ், ஹர்பஜன்சிங், முரளிவிஜய் உள்பட 6 பேரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேற்றியது. பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது.

விடுவிக்கப்பட்ட வீரர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் ஏலத்திற்கு வருகிறார்கள். அத்துடன் நிறைய பேர் ஏலத்திற்கு புதிதாக தங்கள் பெயரை பதிவு செய்தனர். மொத்தம் 1,114 வீரர்கள் ஏலத்திற்கு விருப்பம் தெரிவித்து இருந்தனர். ஐ.பி.எல் நிர்வாகம், அணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு 292 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை அறிவித்தது.

ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 292 வீரர்களில் 164 பேர் இந்தியர்கள் ஆவர். 65 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். வெளிநாட்டவர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 35 பேர் இடம் பிடித்துள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் 17 பேரும் உள்ளனர்.

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் ஏலம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்கும் இந்த ஏலம் நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அணி நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு அணி நிர்வாகமும் வீரர்களை வாங்க மொத்தம் ரூ.85 கோடி செலவு செய்யலாம். இதில் ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்குரிய ஊதியம் போக மீதி தொகையை கொண்டு தான் இந்த ஏலத்தில் வீரர்களை வாங்க முடியும். அந்த வகையில் அதிகபட்சமாக பெயர் மாற்றத்துடன் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் ரூ.53.2 கோடி கையிருப்பு வைத்துள்ளது. அந்த அணிக்கு மொத்தம் 9 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ரூ.19 கோடியே 90 லட்சம் இருப்பு வைத்திருக்கிறது. ஒரு வெளிநாட்டவர், 5 இந்தியர் என்று 6 பேரை சென்னை அணி எடுக்கலாம்.

ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 22 பேரும் அதிகபட்சமாக 25 வீரர்களையும் வைத்துக் கொள்ள முடியும். அதன் அடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு அணியும் காலியான இடங்களை முழுமையாக நிரப்பினால் மொத்தம் 61 வீரர்கள் இன்றைய ஏலத்தில் எடுக்கப்படுவார்கள்.

ஏலப்பட்டியலில் மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித், ஷகிப் அல்-ஹசன், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், பிளங்கெட், ஜாசன் ராய், மார்க்வுட், கேதர் ஜாதவ், ஹர்பஜன்சிங் ஆகிய 10 பேரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்களை ரூ.2 கோடியில் இருந்து ஏலத்தில் கேட்பார்கள். இதில் சுமித், மேக்ஸ்வெல், மொயீன் அலி, கேதர் ஜாதவ், ஹர்பஜன்சிங் ஆகியோர் அதிக விலை போவதற்கு வாய்ப்புள்ளது.

சென்னை அணியில் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று விட்டதால் சரியான கலவைக்கு அதிரடியான வெளிநாட்டு வீரர் அவசியமாகும். அனேகமாக மேக்ஸ்வெல், மொயீன் அலி, மார்னஸ் லபுஸ்சேன் (தொடக்க விலை ரூ.1 கோடி) ஆகியோரில் ஒருவரை சென்னை அணி நிர்வாகம் குறி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு கே.கவுதம், ஜலஜ் சக்சேனாவை கவனத்தில் கொண்டுள்ளனர்.

உலகின் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் டேவிட் மலான், அலெக்ஸ் ஹாலஸ் (தொடக்க விலை தலா ரூ.1½ கோடி), ஆரோன் பிஞ்ச், ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் (தலா ரூ.1 கோடி), கைல் ஜாமிசன், கிறிஸ் மோரிஸ் (ரூ.75 லட்சம்), ஷிவம் துபே (ரூ.50 லட்சம்) ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொடர்ந்து புறக்கணிக்கப்படும் இந்திய வீரர் புஜாரா (ரூ.50 லட்சம்) மீது இந்த தடவையாவது அணிகள் கரிசனம் காட்டுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏலப்பட்டியலில் ஷாருக்கான், பெரியசாமி, முகமது, அருண்கார்த்திக், ஹரி நிஷாந்த் உள்பட 8 தமிழக வீரர்களும் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களில் சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் தொடரில் அதிரடி காட்டி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்த ஷாருக்கானை எடுக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இவரது ஆரம்ப விலை ரூ.20 லட்சம் ஆகும். தெண்டுல்கரின் மகன் அர்ஜூனும் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

ஏலம் நிகழ்ச்சியை பிற்பகல் 3 மணி முதல் விண்மீன் விளையாட்டு சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »