Press "Enter" to skip to content

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி தொடங்கியது- 1200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

ஐந்து நாட்கள் நடைபெறும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில், 27 மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

குல்மார்க்:

இரண்டாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டி, ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் இன்று தொடங்கியது. துவக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

விளையாட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு அல்லது ‘டைம் பாஸ்’ மட்டுமல்ல. விளையாட்டுகளில், நாம், குழுவாக இணைந்து செயல்படும் உணர்வைக் கற்றுக்கொள்கிறோம், தோல்விகளில் புதிய வழிகளைத் தேடுகிறோம், மீண்டும் வெற்றிகளை பெற கற்றுக்கொள்கிறோம். விளையாட்டானது, வீரர்களின் வாழ்க்கையையும் வாழ்க்கை முறையையும் சிறப்பாக்குகிறது. இது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகளின் அனுபவம், நாம் முழுமையான அணுகுமுறையுடன் முன்னேற உதவும். இந்த குளிர்கால விளையாட்டுக்கள் புதிய விளையாட்டு சூழல் அமைப்பை நிறுவ உதவும். கேலோ இந்தியா சிறப்பு மையங்களும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாவை மேம்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

5 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில், 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1200 தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஸ்னோஷூ போட்டி, ஐஸ் ஸ்கேட்டிங், ஐஸ் ஹாக்கி, பனிச்சறுக்கு, ஸ்னோபோர்டிங், பனிமலையேறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய ராணுவம் மற்றும் ஜவகர் மலையேற்ற பயிற்சி நிறுவனம் மற்றும் குளிர்கால விளையாட்டு அமைப்பின் தடகள வீரர்களும் போட்டியில் பங்கேற்கின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »