Press "Enter" to skip to content

சுஷில் குமார் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு

தப்பியோடிய இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் நண்பர் அஜய் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார்.  மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான மற்றொரு வீரர் சாகர் தான்கட் (வயது 23).  கடந்த 4ந்தேதி, மல்யுத்த வீரர் சாகர் தான்கட் மற்றும் அவருடைய நண்பர்களை, சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.  

இதன்பின்னர் சுஷில் குமாரும், அவரின் நண்பர்களும் தப்பிவிட்டனர்.  பலத்த காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை மற்றொரு நண்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.  ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இது தொடர்பாக  சாகர் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 10 பேரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார்.  சாகர் உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றினர்.  அவரின் நண்பர்கள் மீதும் காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்தபின், சுஷில் குமார் ஹரித்துவார் சென்று, அங்கிருந்து ரிஷிகேஷ் சென்றுள்ளார். பின்னர் சுஷில் குமார் தொடர்ந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டே வருகிறார். இதனால் சுஷில் குமார் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர். இதனையடுத்து, சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் அவர் மீது டெல்லி காவல் துறையினர் பார்வைஅவுட் அறிவிப்பு பிறப்பித்தனர்.

இந்த நிலையில், மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று அவரை பிடிப்பதற்கு பரிசு தொகை அறிவிக்கவும் டெல்லி காவல் துறையினர் முடிவு செய்தனர்.

இதன்படி, இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என டெல்லி காவல் துறையினர் அறிவித்து உள்ளனர்.  இதேபோன்று தப்பியோடிய அவரது நண்பர் அஜய் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »