Press "Enter" to skip to content

லா லிகா கால்பந்து : அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை நெருங்கியது

லா லிகா கால்பந்து போட்டியில் 25-வது வெற்றியை ருசித்த அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை நெருங்கியது.

மாட்ரிட்:

20 முன்னணி கிளப் அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

இந்த போட்டி தொடர் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நேற்று முன்தினம் இரவு மாட்ரிட்டில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான அட்லெடிகோ மாட்ரிட், ஒசாசுனா அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 75-வது நிமிடத்தில் ஒசாசுனா அணி வீரர் புதிமிர் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனை அடுத்து ஆக்ரோஷமாக ஆடிய அட்லெடிகோ மாட்ரிட் அணி அடுத்தடுத்து 2 கோல்கள் திருப்பி சரிவில் இருந்து மீண்டதுடன் வெற்றியையும் தன்வசமாக்கியது. அந்த அணி வீரர்கள் ரெனான் லோடி (82-வது நிமிடம்), லூயிஸ் சுவாரஸ் (88-வது நிமிடம்) கோல் அடித்தனர். முடிவில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒசாசுனாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அட்லெடிகோ மாட்ரிட் அணி ‘சாம்பியன்’ பட்டத்தை நெருங்கியது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் கிளப் அணியை சாய்த்தது. வெற்றிக்கான கோலை ரியல் மாட்ரிட் அணி வீரர் நாசோ 68-வது நிமிடத்தில் அடித்தார். இந்த வெற்றியால் சாம்பியன் பட்ட வாய்ப்பில் ரியல் மாட்ரிட் அணி நீடிக்கிறது.

இன்னொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் செல்டா விகோ அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. பார்சிலோனா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி 28-வது நிமிடத்தில் கோல் அடித்தார். செல்டா விகோ அணி தரப்பில் சான்டி மினா 38-வது, 89-வது நிமிடங்களில் கோல் அடித்தார். இந்த தோல்வியின் மூலம் 3-வது இடத்தில் உள்ள பார்சிலோனா அணியின் (76 புள்ளிகள்) சாம்பியன் பட்ட போட்டி முடிவுக்கு வந்தது.

இதுவரை நடந்த லீக் ஆட்டங்கள் முடிவில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 25 வெற்றி, 8 டிரா, 4 தோல்வியுடன் 83 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தொடருகிறது. ரியல் மாட்ரிட் அணி 24 வெற்றி, 9 டிரா, 4 தோல்வியுடன் 81 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில் சாம்பியன் பட்டத்தை வெல்வதில் இவ்விரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வருகிற 22-ந் தேதி நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட், வல்லாடோலிட் அணியையும், ரியல் மாட்ரிட், வில்லா ரியல் அணியையும் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தின் முடிவை பொறுத்தே சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பது தெரியவரும். 2 புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »