Press "Enter" to skip to content

ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஸ்பெயின்-போலந்து ஆட்டம் ‘டிரா’

ஜெர்மனி, போர்ச்சுக்கல் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன. அங்கேரி ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் ஒரு புள்ளி பெற்றுள்ளன.

செவில்லி:

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற ‘யூரோ’ கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. 11 நாடுகளில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ்-அங்கேரி (எப் பிரிவு) இடையே நேற்று நடந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி 4-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தியது.

‘எப்’ பிரிவில் பிரான்ஸ் ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஜெர்மனி, போர்ச்சுக்கல் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன. அங்கேரி ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் ஒரு புள்ளி பெற்றுள்ளன.

இந்த பிரிவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் பிரான்ஸ்-போர்ச்சுக்கல், ஜெர்மனி-அங்கேரி (23-ந் தேதி) மோதுகின்றன.

இந்திய நேரப்படி இன்று நள்ளிரவில் நடந்த ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் உள்ள ஸ்பெயின்-போலந்து அணிகள் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் ஆட்டம் விறு விறுப்பாக இருந்தது.

ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஸ்பெயின் கோல் அடித்தது. அந்த அணி வீரர் அல்வாரோ மொராடா இந்த கோலை அடித்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

2-வது பாதி ஆட்டத்தில் போலந்து வீரர்கள் ஆக்ரோசமான ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு 54-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணி வீரர் ராபர்ட் லெவன்ட்டஸ்கி கோல் அடித்து அசத்தினார். இதனால் 1-1 என்ற சம நிலை ஏற்பட்டது.

இந்த கோலால் ஸ்பெயின் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் 2-வது கோலை அடித்துவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் அந்த அணி விளையாடியது.

84-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி 2-வது கோலை அடித்து முன்னிலை பெற நல்ல வாய்ப்பு கிடைத்தது. பெனால்ட்டி வாய்ப்பை அந்த அணி வீரர் அல்வாரோ மொராடா வீணடித்தார். போலந்து கோல் கீப்பர் அவர் அடித்த ஷாட்டை அருமையாக தடுத்தார்.

ஆட்டத்தின் இறுதிவரை ஸ்பெயின் அணியால் 2-வது கோலை அடிக்க முடியவில்லை. இதனால் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

3 முறை சாம்பியன்னான ஸ்பெயின் அணி தொடக்க ஆட்டத்தில் கோல் எதுவு மின்றி சுவீடனுடன் டிரா செய்தது. இந்த ஆட்டமும் டிரா ஆனதால் அந்த அணி மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சுலோவாக்கியா அணிக்கு எதிராக கடைசி ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

‘இ’ பிரிவில் சுவீடன் 4 புள்ளிகளுடனும், சுலோவாக்கியா 3 புள்ளிகளுடனும், ஸ்பெயின் 2 புள்ளிகளுட னும், போலந்து ஒரு புள்ளிகளுடனும் உள்ளன.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் ‘ஏ’ பிரிவில் உள்ள இத்தாலி-வேல்ஸ், சுவிட்சர்லாந்து-துருக்கி அணிகள் மோதுகின்றன. இத்தாலி அணி மட்டும் இந்த பிரிவில் இருந்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »