Press "Enter" to skip to content

எந்த செயலை ஆரம்பித்தாலும் தோல்வியில் முடிகிறதா? விஜய தசமியில் ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்!

விஜய தசமி நன்னாளை முன்னிட்டு இன்று (19/10/2018) பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது மற்றும் அக்ஷராப்யாசம் எனப்படும் வித்யாரம்ப நிகழ்ச்சியும் பள்ளிகள் மற்றும் சரஸ்வதி கோயில்களிலும், சரஸ்வதியின் குருவான ஸ்ரீ ஹயக்ரீவர் கோயில்களிலும், சிருங்கேரி சாரதாபீடம் போன்ற இடங்களிலும் கோலாகலமாக நடைபெறுகின்றது. நவராத்திரி பண்டிகை நாளில் ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள். 

ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு புரட்டாசி மாதம் 24-ம் தேதி புதன் கிழமை (10/10/2018) ஆரம்பமாகின்றது. தக்ஷிணாயன புன்ய காலத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், புரட்டாதி மாதத்தில் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் சாரதா நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.

வித்தியாரம்பம்

விஜய தசமி நாளில் நாம் துவங்கும் எல்லா புதிய முயற்சிகளுக்கும், குறிப்பாக வித்யாரம்பம் போன்றவை பல மடங்கு அபிவிருத்தி ஆகி வெற்றியைத் தரும் என்பது ஆன்றோர் வாக்கு.

குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது அல்லது வீட்டிலேயே வித்தியாரம்பம் செய்வது, நடனம், சங்கீதம், வீணா, வேணு, வயலின் போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் நலம். முன்பே கற்க ஆரம்பித்தவர்களும் முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தங்கள், வாத்தியக் கருவிகள், மற்றும் தமது தொழிலுக்கான கருவிகளை விஜய தசமி பூஜை முடிந்து உபயோகம் செய்தல் நலம் என்று கூறப்படுகிறது. இந்த நல்ல நாளில் தமது குருவுக்கு வந்தனங்கள் செய்து குரு-தக்ஷிணை அளித்து வணங்குதல் மரபு.

மகிஷாசூர வதம்

ஒருமுறை பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக் கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் “மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித் திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

திதிகளில் சிறந்தது தசமி ததி

திதிகளில் எட்டுமி நாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார். ஆயுதம் எடுத்தல், அரண் அமைத்தல், போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை செய்ய உகந்ததாகப் போற்றப்படுகின்றது. எட்டுமி திதியில்தான் பராசக்தியான அம்மாள் ஆயுதம் தரித்த நாளாகும். இந்த நாளில் பரிகார பூஜைகள் செய்வது சிறப்பாகும். நவமி திதி அம்பிகையின் நாள். இந்நாளில் எதிரிகளைக் கொல்லுதல், விநாசம் செய்தல் போன்றவற்றிற்கு உகந்ததாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன. புவனத்தைக் காக்கும் ஜெகன்மாதா மகிஷாசூரனுடன் போர் செய்து வதம் செய்த நாளாகும்.

திதிகளில் பத்தாவது திதி தசமி திதி ஆகும். தசமி திதி தர்மராஜாவின் நாள். மதவிழாக்கள், ஆன்மீக செயல்கள் நன்மை தரும். மேலும் வெற்றியைக் கொண்டாடும் நாளாகவும் போற்றப்படுகின்றது. அன்னை ஆதிபராசக்தி மகிஷாசூரனை வதம் செய்ததை கொண்டாடும் விதமாக அமைந்ததே விஐய தசமி நாளாகும். இந்நாளில் ஆரம்பிக்கும் நற்காரியங்கள் வெற்றியில் முடியும் என்பது ஐதீகம்.

விஜயதசமியும் வன்னி மரமும்

சாதாரணமாக, கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் காட்டில் வசிக்கும் காலத்தின் கடைசி ஒரு வருடம் அக்ஞாத வாசத்தின் போது வன்னி மரப் பொந்தில் அர்ஜுனனது காண்டீபம் முதலான ஆயுதங்களை யாருக்கும் தெரியாது ஒளித்து வைக்கின்றனர்.

துரியோதனன் இவர்களை வெளிப்படுத்த முயலும் போது உத்தரனை முன்னிறுத்திக் கொண்டு வன்னி மரப் பொந்தில் இருக்கும் ஆயுதங்களை எடுத்து போரிட்டு கெளரவர்களை வெல்கிறான் விஜயன். அவன் இவ்வாறு அந்தப் போரில் வெற்றி பெற்ற நாளே விஜய தசமி என்றும் கூறப்படும். இந்நாளில் அவரவர் தமது தொழிலுக்கு மூலதனமான ஆயுதங்களை வைத்து பூஜை செய்வதும் இதனால் தான். இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர். இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.

ஒழுக்கத் திருநாள்

சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. சீதையைச் சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதி தேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம் சிறு வயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார்.

அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார். அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதைக் காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

வெற்றிக்குரிய தசமி திதி

எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளைக் கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை “அக்ஷராப்யாசம்” என்பர். கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் அக்ஷர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

– அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

Source: dinamani

Mission News Theme by Compete Themes.