Press "Enter" to skip to content

ஐப்பசி மாதப்படி எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிக்கு அலைச்சல்?

12 ராசிக்காரர்களுக்குமான ஐப்பசி மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்கள் பிரச்னைக்கு நீங்களே முடிவெடுக்க நினைக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். 

குடும்பம் பொறுத்தவரை பொறுப்புகள் அதிகரிக்கும். சிலர் நீண்ட நாட்களாக நோயினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள் அல்லவா. இப்போது அது சரியாகும். சில கலகங்கள் அவ்வப்போது தோன்றி மறையும், சிலருக்கு அது வழக்காக மாறும். எச்சரிக்கையாக இருங்கள்.

தொழிலில் உன்னத நிலையை அடைய வழி பிறக்கும். நிறைய உழைத்தாலும் அதற்கேற்ற பலனை நீங்கள் சற்று குறைவாகத்தான் பெற முடியும். 

உத்தியோகத்தில் மிக நம்பிக்கையான  பணியாளர்களை அமர்த்த சற்று யோசிக்க வேண்டும். உடன்   பணிபுரிபவர்களிடம் எப்போதும் அனுசரித்துச் செல்லுங்கள். 

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  

கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பெண்கள்  அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது சிறந்தது. அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மாணவர்களுக்கு கண்ணும் கருத்துமாகக் கல்வியில் நாட்டம் செலுத்துங்கள். சக மாணவர்களிடம் பழகும் போது கவனமாக இருக்கவும்.

அசுபதி:
இந்த மாதம் எந்த விசயங்களிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. 

பரணி:
இந்த மாதம் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் சேரும். நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். 

கார்த்திகை – 1:
இந்த மாதம் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. புத்தி சாதுரியத்துடன் காரியங்களைச் செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். 
பரிகாரம்:  தினமும் கந்தர் அனுபூதி சொல்லி முருகன் வழிபாடு செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 2, 3
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 9, 10

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்திசாதுர்யம் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் வீட்டில் நிம்மதியான நிலை காணப்படும். தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். 

குடும்பத்தில் முக்கிய நபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொருளாதார விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப விழாக்களில் கலந்து கொண்டு நீங்களே இழுத்துப் போட்டு காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

தொழிலில் நல்ல லாபமும் முன்னேற்றமும் இருக்கும். புதிதாகத் தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும் அதனால் கிடைக்க வேண்டிய ஆதாயங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். பதவி உயர்வு உண்டாகும்.  முன்னேற்றவழியில் கொண்டு செல்லும்.

அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். 

பெண்கள் அவ்வளவாக வேலையைச் செய்ய முடியாது. உடல்நிலையில் சோர்வு அதிகமாக காணப்படும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சில முயற்சிகள் கூட உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.

கார்த்திகை – 2, 3, 4
இந்த மாதம் எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். எந்தக் காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். புதியநபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

ரோகிணி:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களைத் திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.

மிருகசீரிஷம் – 1, 2:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம்.

பரிகாரம்: நவக்கிரகங்களிலுள்ள சந்திர பகவானுக்கு அர்ச்சனைசெய்து வழிபடவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 4, 5
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 11, 12, 13

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உடன் பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்துச் செல்லும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் உடன் பணிபுரிவோர் ஆதரவாக இருப்பார்கள். கோபுர பார்வை உங்களுக்கு கை கொடுக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனைகள் எழலாம். கவனமுடன் இருப்பது மிக முக்கியம். 

குடும்பத்தில் சிற்சில விவாதங்கள் வந்து போகலாம். பிள்ளைகளின் விசயத்தில் கவலை வேண்டாம். மொத்தத்தில் நன்மையை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். லாபத்தை பன்மடங்காக எதிர்பார்க்கலாம். சிலர் கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். முக்கிய நபர்களை இந்த மாதம் சந்திக்க வெற்றி உண்டாகும்.
உத்தியோகத்தில் இருக்கும் நபர்கள் வேலையை தொடந்து நல்ல முறையாக பணியாற்றி வருவீர்கள். மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும். கேட்ட உதவிகள் அலுவலகத்தில் கிடைத்தே தீரும். சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவிக் கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். 

கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும். பெண்கள் நல்லவிதமாகக் குடும்பத்தை வழி நடத்துவார்கள். மாமியார் மருமகள் பிரச்னையின்றி சுமூகமான சூழ்நிலை நிலவும். மாணவர்கள் மேற்படிப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பெற்றோர் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

மிருகசீரிஷம் – 3, 4:
இந்த மாதம் வாக்குவாதங்கள் மற்றும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும்.

திருவாதிரை:
இந்த மாதம் உற்சாகம் உண்டாகும். பயணங்களினால் ஏற்பட்ட தடங்கல்  நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.

புனர்பூசம் – 1, 2, 3:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்குச் சென்று அவில் நிவேதனம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
அதிர்ஷ்ட தினங்கள்: நவ. 6, 7, 8
சந்திராஷ்டம தினங்கள்: அக். 18, 19; நவ. 14, 15

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை குறித்த நேரத்தில் முடிக்கும் வல்லமை படைத்த கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். 
குடும்பத்தில் சந்தோஷம் குடிகொண்டிருக்கும். அனைத்து வசதி வாய்ப்புகளும் தாமாகவே வந்து சேரும். அரசு வேலைகளில் இருந்த தொய்வு நிலை மாறும். உங்கள் பேச்சிற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள். உங்களுக்கு அதிக நன்மையை நடக்கப்  போகிறது.

தொழிலில் அதிக நன்மைகள் ஏற்பட்டு எந்த தடையும் இல்லாமல் தொழில் அபிவிருத்தி இருக்கும். நல்ல லாபத்தையும் பார்க்கலாம்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவிஉயர்வு பெற்று அதிக ஆதாயங்களைப் பெறுவீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். அது உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வெற்றியாய் அமையும்.

அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும். 

கலைத்துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். 
பெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் வந்து சேரும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பிறரால் தொல்லை வரும். மாணவர்களுக்கு வருகின்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்  பெற சிறப்பாக பயிலுவீர்கள். வெற்றி உண்டாகும்.

புனர்பூசம் – 4: 
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். 

பூசம்:
இந்த மாதம்  எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை தீரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. 

ஆயில்யம்:
இந்த மாதம் வீண்செலவு ஏற்படும். உடல் சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்பாளை மல்லிகை மலர் கொண்டு வழிபட்டு வாருங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
அதிர்ஷ்ட தினங்கள்: நவ. 9, 10
சந்திராஷ்டம தினங்கள்: அக் 20, 21; நவம்பர் 16

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) 

ஓயாது உழைக்கும் எண்ணமுடைய சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் கைக்கு வராது என்றிருந்த பணம் கூட கைக்கு வந்து சேரும். உடலில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். 

குடும்பத்தில் சிலசில வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனாலும் அதிக அளவில் அது பாதிப்பை ஏற்படுத்தாது என நம்பலாம். முக்கிய முடிவுகளை சற்று தள்ளிப்போடுவது நல்லது. இளைய சகோதரர்களால் உங்களுக்கு சில நன்மைகள் உண்டாகலாம். பிறர் செய்யும் அனைத்து காரியங்களும் உங்களுக்கு நன்மையாகவே நடக்கும்.

தொழிலில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும். நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டியது வரும். தேவைப்படும் இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழுவீர்க்ள். உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய வாரமாக அமையும். சக பணியாளார்கள் உங்களுக்கு தொல்லை தருவதாக அமையும். நீங்கள் பொறுமையை கடைப்பிடித்து வெற்றி காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம். மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

பெண்கள் சிறிய அளவில்  நன்மையையும், பொறுமையையும் பெறக்கூடிய கால கட்டம், வேண்டிய அளவில் கிடைக்காவிட்டாலும் ஒரு சிறிய சன்மானம் உங்களுக்கு கிடைக்கும்.

மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு யாரிடமும் எந்த ரகசியத்தையும் சொல்ல வேண்டாம். சக மாணவர்களுடன் பேசும் போது கவனம் தேவை.

மகம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த வாங்குதல்கள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.

பூரம்:
இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 

உத்திரம் – 1:
இந்த மாதம் பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். பணவரத்து இருக்கும். 

பரிகாரம்: சூரியநமஸ்காரம் செய்து தியானம் செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ மாலை சாற்றுங்கள்
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 11, 12, 13
சந்திராஷ்டம தினங்கள்: அக். 22, 23, 24

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் முக்கிய முடிவுகளைச் சற்று ஒத்திப் போடுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம். கூடிய விரைவில் உங்கள் காதுகளை அது எட்டும்.

குடும்பத்தைப் பொறுத்தவரை சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து குலதெய்வ பிரார்த்தனையை முடித்து வைப்பர். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கூடிய விரைவில் நிகழும்.

தொழிலில் முக்கிய முடிவுகளை இப்போது செய்யலாம். சிலர் புதிய தொழிலில் ஈடுபட முயற்சிப்பீர்கள். ஏழாம் பார்வையாக சனி தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் சிலசில சிக்கல்கள் வந்து போகும்.உத்தியோகத்தில் முன்னேற்றமும், ஊக்கமும் சற்று குறைந்து காணப்படும். வங்கிக்கடன் சிலருக்கு கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் வளர்ச்சியின் மீது பொறாமைப்படுபவர்களை பற்றிக் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது. கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாகப் பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 

பெண்கள் சிறப்பாக செயல்பட்டு குடும்பத்தில் நற்பெயர் சம்பாதிப்பீர்கள்.கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 

மாணவர்களுக்கு நண்பர்களுடன் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம்.

உத்திரம் – 2, 3, 4:
இந்த மாதம் மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கை கொடுக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

ஹஸ்தம்:
இந்த மாதம்  தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும்.  புதிய வாங்குதல் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். 

சித்திரை – 1, 2:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள். குடும்பத்தில் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.

பரிகாரம்: பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை சுற்றி வலம் வரவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
அதிர்ஷ்ட தினங்கள்: அக்.18, 19; நவம்பர் 14, 15
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 25, 26

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) ​

உங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்காக உயிரையும் கொடுக்கும் குணமுடைய துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். சிலருக்குப் பாராட்டுகள் கிடைக்கலாம்.

குடும்பத்தில் பிரச்னைகள் ஏதும் இராது. நல்ல சுபிட்ஷமும் சௌபாக்கியமும் உண்டாகும். உடன் பிறந்தோர் உற்ற துணையாக இருப்பார்கள். கணவன் மனைவியரிடையே அன்பும், பாசமும் அதிகமாக காணப்படும். தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வெகுதூரத்தில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

தொழிலைப் பொறுத்தவரை தொழில் ஸ்தானத்தில் ராகு இருப்பதால் அவ்வப்போது பிரச்சினைகள் வந்தாலும் அது உங்களைப் பெரிய அளவில் பாதிப்பை உண்டு பண்ணாது.
உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சில புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்குவார்கள். அதிக திறமையுடன் அதைச் செய்து முடிப்பீர்கள். ஆதலால் நல்ல பேரும், புகழும் கிடைக்கப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள். தெய்வீகப் பணிகளில் நேரடியாகவும் பின்புலமாகவும் இருந்து செயல்படுவார்கள். 

கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். 

பெண்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் கிட்டும். மாணவர்கள் இன்பச்சுற்றுலா சென்று வருவீர்கள். மனம் விரும்பும் மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள்.

சித்திரை – 3, 4:
இந்த மாதம்  பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதுரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். 

ஸ்வாதி:
இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும்.  மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கவலைகள் நீங்கும்.

விசாகம் – 1, 2, 3:
இந்த மாதம் மனோ தைரியம் கூடும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ நரசிம்மர் காயத்ரீ சொல்லி பானகம் நிவேதனம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
அதிர்ஷ்ட தினங்கள்: அக். 20, 21; நவ. 16, 17
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 27, 28

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் உங்கள் பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும்.

குடும்பத்தில் தேவையில்லாத விரயங்கள் உண்டாகிக்கொண்டிருக்கும். அதை சுபச் செலவுகளாக மாற்றிக் கொள்ளலாம். வீடு, மனை, வாகனம் போன்றவற்றில் பணத்தைச் செலவிடுவது நல்லது. மனைவி மக்களிடையே அவ்வப்போது பிரச்சினைகள் உண்டாகும். 

தொழிலில் நல்ல அபிவிருத்தி உண்டாகும். வியாபாரம் நல்லபடியாக நன்மையைத் தரும். உற்பத்தி அதிகரிக்கும். உத்தியோகத்தில் அரசாங்க பணிகளில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு உண்டாகலாம்.  எதிர்பார்த்திருந்த சலுகைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

அரசியல்வாதிகள் நற்செயல்களின் வெளிப்பாடுகளால் உயர்வைப்பெற்றுப் புகழ் பெறுவீர்கள் அரசியலுடன் இணைந்த வகையில் தங்களது தொழில் வாய்ப்பைப் பயன்படுத்துபவர்கள் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் தகுந்த அனுசரணையுடன் அடைந்து ஏற்றம் பெறுவார்கள்.  

கலைத்துறையினர் தங்கள் திறமையை  நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். 

பெண்கள் குடும்பத்தில் நிர்வாகத்திறமையுடன் செயல்படுவீர்கள். அக்கம் பக்கத்தாரிடம் கவனமாக பழகவும்.
மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக விருப்பம் கொண்டிருப்பீர்கள். ஆசிரியர்கள் உங்கள் மீது அதிகம் பற்று வைத்திருப்பர்.

விசாகம் – 4:
இந்த மாதம் காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம். உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும்.

அனுஷம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம்.

கேட்டை:
இந்த மாதம்  கணவன், மனைவிக்கிடையே  கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பரிகாரம்: முருகனை வழிபட்டு குமாரஸ்தவம் சொல்லி வாருங்கள். 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
அதிர்ஷ்ட தினங்கள்: அக். 22, 23, 24
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 29, 30

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) 

அமைதியாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் சிறு சிறு உடல் உபாதைகளால் அவதிப்பட நேரலாம். ஆதலால் மனசோர்வும் உண்டாகலாம். செலவுகள் ஏற்படும் நேரம்.

குடும்பத்தில் பணவரவிற்கு  குறைவிருக்காது. அதிக வருமானம் கிடைக்கும். சனிபகவான் ஜென்மத்தில் அமர்ந்திருப்பதால் உடல் நிலையில் அவ்வப்போது தொந்தரவுகள் வருவதை தவிர உங்களுக்கு நன்மையே நடக்கும். வேலைப் பளுவின் காரணமாக நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். உடல்நிலையை அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள்.

தொழிலைப் பொறுத்தவரை உங்களுக்கு முக்கியமான காலகட்டம். புதிய தொழில் துவங்குவது இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவது போன்ற அனைத்துமே செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெற்று தக்க சன்மானம் பெறுவர். நிர்வாகத்திறமை கொண்டவர்கள் உயர்ந்த நிலையை அடையப் பெறுவார்கள்.

அரசியல் துறையினர் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  

கலைத்துறையினருக்குத் தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாகப் பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 

பெண்களின் நீண்ட நாளைய கனவு நனவாகும். கணவரின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களுக்கு உண்டான பொறுப்புகள் அதிகரிக்கும். நேர்மையாக நடந்து கொள்வதன் மூலம் ஆசிரியரிடம் பாராட்டைப் பெறலாம்.

மூலம்:
இந்த மாதம் மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். மாணவர்கள்  பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பூராடம்:
இந்த மாதம் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.

உத்திராடம் – 1:
இந்த மாதம் உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில் வியாபாரம்  தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.  

பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனுக்கு வெண்பொங்கல் நிவேதனம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
அதிர்ஷ்ட தினங்கள்: அக். 25, 26
சந்திராஷ்டம தினங்கள்: அக். 31; நவம்பர் 01

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) ​

மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் மனம் கொண்ட மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெகு விரைவில் சிறந்த இடமாற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். வீடு வாங்குவது கட்டுவது அனைத்தும் பிரச்சினையின்றி நடந்தேறும். உறவினர்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள். தூரத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உடல்நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

தொழிலில் நல்ல முன்னேற்றங்களும் வருமானமும் அதிகரித்துக் காணப்படும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நல்ல வியாபாரம் நடக்கும். தேங்கிய பொருட்கள் எல்லாம் விற்பனையாகிவிடும்.
உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு உங்களுக்கு இப்போது கிடைக்கும். 

அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம். 

கலைத்துறையினர் தங்கள் தொழிலில் மிகுற்த அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான பொருளாதாரமும் அதிகமான புகழும் பெறுவார்கள். தங்களுக்குத் தேவையான ஆடம்பர விஷயங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு நீண்ட நாளைய கனவுகள் நிறைவேறும். தாய்வீட்டிற்குச் சென்றுவருவீர்கள். மனதில் நிம்மதி இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். அனைவரின் பாராட்டும், நன்மதிப்பும் கிடைக்கும். முயற்சியில் வெற்றி கிட்டும். 

உத்திராடம் 2, 3, 4
இந்த மாதம் குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்குத் தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுப்பீர்கள்.

திருவோணம்
இந்த மாதம் கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும்.

அவிட்டம் 1, 2
இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
அதிர்ஷ்ட தினங்கள்: அக். 27, 28
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 2, 3

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வீண் விவாதங்களில் ஈடுபடாத கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் அலுவலகத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களின் ஆதிக்கம் குறையும். ஆதலால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். மனம் நிம்மதி பெற தியானம் செய்யுங்கள்.

குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உற்றார், உறவினர்களுடன் விருந்து கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும்.

தொழிலில் வருமானம் நல்லபடியாக இருந்தும் வீண் செலவுகள் ஏற்படுவதால் மனம் கவலையில் இருக்கும்.  குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் எடுக்க சற்று கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. கைக்கு வர வேண்டிய பாக்கிகள் இப்போது வசூலாகும். 

அரசியல்வாதிகளுக்கு  மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.

பெண்களுக்கு அலுவலகம் செல்பவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நேரத்திற்கு உணவருந்தாததால் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை. மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவித் தொகை தடையின்றி கிட்டும்.

அவிட்டம் 3, 4
இந்த மாதம் பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். அரசு தொடர்பான  காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

சதயம் 
இந்த மாதம்  புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலைக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.

பூரட்டாதி
இந்த மாதம்  யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள்.

பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
அதிர்ஷ்ட தினங்கள்: அக். 29, 30
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 4, 5

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சித்தர்களின் அருளால் நல்வழிப்படும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் பணம் கொடுப்பவர்கள் சில காரணங்கள் சொல்லி தள்ளிப் போடலாம். கவலை வேண்டாம்.

குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அதைச் சமாளிக்கலாம். நீங்கள் பேசுவதைத் தவறாக புரிந்து கொண்டு உங்களிடம் வாக்கு வாதத்திற்குக் குடும்பத்தினர் வரலாம். எனவே வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நல்லது.

தொழில் – வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் அதிக நஷ்டம் இல்லாமல் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். அதிக முதலீடுகளைச் செய்யாமல் இருப்பது அவசியம்.

உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைப்பளு இருக்கும். மேலதிகாரிகளின் வேலையையும் நீங்களே செய்ய வேண்டி இருக்கும். அதிக நேரம் வேலை செய்யும் நிலை உருவாகும்.
அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

கலைத்துறையினருக்குப் பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  

பெண்களுக்கு உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். உங்களுக்குப் பிடித்தவர்களை சந்திப்பீர்கள். அது உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
மாணவர்களுக்கு உதவித் தொகைகள் கிடைக்கும். சிலர் போட்டிகளில் வெற்றி பெற்று தொகைப்பரிசை வெல்வீர்கள்.

பூரட்டாதி 4
இந்த மாதம் சோர்வில்லாமல் எப்போதும் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும்  புகழும் உண்டாகும்.

உத்திரட்டாதி
இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.  வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.

ரேவதி
இந்த மாதம் பெண்கள்  எந்த செயலையும் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். இருப்பினும் நன்மையே நடக்கும்.

பரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வந்தால் தொழில் பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
அதிர்ஷ்ட தினங்கள்: அக். 31; நவ. 01
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 6, 7, 8

 

Source: dinamani

Mission News Theme by Compete Themes.