Press "Enter" to skip to content

எவ்வளவு வசதியாக இருந்தாலும் நிம்மதியாக சாப்பிட முடியவில்லையா? அன்னாபிஷேகத்தில் சந்திரமெளீஸ்வரரை பார்வை செய்யுங்க!

நாளை (24/10/2018) ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு திருமயிலை கபாலீஸ்வரர், சுக்கிர ஸ்தலமான வெள்ளீஸ்வரர், சிதம்பரம் நடராஜர், திருவண்ணாமலை, காசி விசுவநாதர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

அன்னாபிஷேகம்

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேக விழாவாக சிவன் கோயில்களில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது. பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகிறான். அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று, அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து 

சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்குப் போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தைத் தர வல்லதாகும். சோறு கண்ட இடம் சொர்கம் யாராவது உறவினர்  வீட்டிற்கு விருந்துக்குப் போன இடத்தில் நீண்ட நாட்கள் தங்க நேர்ந்தால் “சோறு கண்ட இடம் சொர்கம் ஆயிற்று” என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு. அதன் உண்மையான அர்த்தம்  என்ன தெரியுமா? சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமியன்று பச்சரிசியால் ஆன வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் நடக்கும். அதைத் தரிசித்தால் சொர்கத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பதுதான்.

அன்னத்திற்கும் தாயிற்கும் உள்ள தொடர்பு

அன்ன பூர்னே சதா பூர்னே சங்கர ப்ரான வல்லபே!

ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹிச்ச பார்வதி!!

என அன்னபூரனாஷ்டகம் எனும் ஸ்லோகத்தில் சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. அன்னையோடு அறுசுவை உண்டிருப்போம் என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். 

ஐப்பசி பௌர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தைத் தெய்வம் என்பார்கள். அன்னாபிஷேகம் அனைவரும் நாளை மதியம் சிவாலயம் சென்று உச்சிகால பூஜையின் போது செய்யப்படும் அன்னாபிஷேத்தைக் கண்டு நமக்குப் படியளக்கும் அம்மையப்பன் அருள் பெறுவோம்.

சோழநாடு சோறுடைத்தது

தமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மாவேந்தனாக விளங்கிய இராசராச சோழனால் சோழப் பேரரசு குன்றாப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்றது. சோழ நாடு, பெரிய மலைகள் இல்லாத பெருநிலப் பரப்பாக விளங்கியது. காவிரி, பல கிளையாறுகளாகப் பாய்ந்து அந்த நாட்டை வளமடையச் செய்தது. நீர் வளமும், நில வளமும் கொண்ட சோழ நாட்டைச் ‘சோழ நாடு சோறுடைத்து’ என்று சான்றோர்கள் புகழ்ந்தனர். ஒரு நாட்டில் நீர் வளம் நிறைந்து விவசாயம் செழிக்கிறது என்றால் அங்கு சந்திரனின் ஆசி நன்றாக இருக்கிறது எனப்பொருள்.

ஹரிசந்திரபுரம்

நீர் வளமும் நிலவளமும் நிறைந்து விவசாயம் செழித்து விளங்கும் சோழ வள நாட்டில் நவக்கிரக ஸ்தலங்களும் பல சிவாலயங்களும் விஷ்ணு ஸ்தலங்களும் நிறைந்து கோயில் நகரமாக விளங்கும் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் சோழன்மாளிகை ஹரிசந்திரபுரம் மிகவும் பழமையும் சிறப்பும் வாய்ந்தது. அப்படி என்ன சிறப்பு இந்த ஊருக்கு இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த ஊரில் குடிகொண்டுள்ள செளந்தரவல்லி சமேத சந்திரமெளீஸ்வரர் தாங்க சிறப்பு. இத்தல இறைவனுக்கு சந்திரன் பூஜை செய்து சாப விமோசனம் அடைந்ததால் இது ஒரு சிறந்த சந்திர பரிகார ஸ்தலமாகும். 

மேலும் காஞ்சி மகாபெரியவர் இந்த ஆலயத்திற்குப் பலமுறை வருகை புரிந்துள்ளார் என்பதில் இருந்தே இத்தலத்தின் சிறப்பை எளிதாக உணர முடியும். மேலும் இத்தலத்தின் அருகில் பாற்குளம் எனும் ஒரு குளம் உள்ளதும் இது ஒரு சந்திர ஸ்தலம் என்பதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. மேலும் இத்தலம் ஒரு தேவார வைப்புத்தலம் என்பது இதன் சிறப்பாகும். பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவை தேவார வைப்புத் தலங்களாகும். வைப்புத்தலம் என்பது தனிப்பதிகம் பெறாது வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் தலப்பெயர் வரும் தலங்களைக் குறிப்பிடும். 

அன்னாபிஷேகமும் ஜோதிடமும்

ஜோதிடத்தில் அன்னம் எனப்படும் உணவிற்கான காரக கிரகம் சந்திரன். அன்னை எனப்படும் மாத்ரு காரகனும் சந்திரனேதான். நமக்கெல்லாம் படியளக்கும் அன்னபூரணியான பார்வதியை வணங்கக் காரக கிரகமும் சந்திரனேதான். இன்னும் சொல்லப்போனால் ஸ்ரீ மகாலக்ஷமியை கூட சந்திர சகோதரி என வேதம் குறிப்பிடுகிறது. மேலும் பாசம் அன்பு போன்ற உணர்ச்சிகளைக் குறிக்கும் கிரகமும் சந்திரனேதான்.

இன்னும் சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் பகலில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் மாத்ரு காரகன் எனவும் இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மாத்ரு காரகன் எனவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆக சந்திரன் உச்சமாவதுகூட சுக்கிரனின் வீட்டில்தான். ஆக சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் எப்பொதும் ஒரு தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். அப்படி இருப்பதுதான் நன்மையும் கூட. எப்போதும் வீட்டிலிருக்கும் வரை நமக்கு நம் அன்னையிடும் உணவின் அருமை தெரிவதில்லை. ஆனால் வெளியில் சென்றிருக்கும்போது அது நன்றாக புரிந்துகொள்ளும்படி நேர்ந்துவிடும்.

மேற்கூறிய கருத்தை உண்மையாக்கும்படி இந்த வருட அன்னாபிஷேக நாளான ஐப்பசி 7-ம் நாள் (அக்டோபர் 24) அன்றைய கிரகநிலை அமைந்திருப்பது விந்தையிலும் விந்தை. தந்தையான சூரியன் இருப்பது சுக்கிரனின் வீடான துலா ராசியில் ராகு சாரத்தில். ஆனால் மாத்ரு காரகனான சந்திரன் அஸ்வினி நக்‌ஷத்திர சாரத்தில் 180 பாகையில் சம சப்தமமாக நின்று மாத்ருகாரகனும் பித்ருகாரகனும் பௌர்ணமி யோகத்துடன் ஒருவரை ஒருவர் அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் என்பிற்கிணங்க கிரஹ அமைவுப்பெற்ற சந்திர பலம் பெற்ற பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் அமைந்திருக்கிறது.

அன்ன தோஷமும் அன்னத் துவேஷமும்

கர்ப்பிணிகள் வந்து பசி என்று பிச்சை கேட்கும் போது, அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களை, பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் புசிப்பதற்கு எதுவும் கொடுக்காதவர்களை, உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களைக் கோபித்து, உணவைச் சாப்பிடவிடாமல் விரட்டி அடிப்பவர்களை, தன் தேவைக்கும் அதிகமாக உணவைத் தயார் செய்து வீணடிப்பவர்களை, தான் உண்டது போக ஏராளமான அன்னம் கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களை, மற்றும் பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களை, பந்தியில் வஞ்சனை செய்பவர்களை (அதாவது சாப்பிடும் பந்தியில் நமக்கு வேண்டியவர்களுக்குத் தேவையான உணவை அளித்து மற்றவர்களைக் கவனிக்காமல் இருப்பது), கறவை நின்ற பசு மாட்டிற்குத் தேவையான உணவு அளிக்காதவர்களை அன்னதோஷம் பீடிக்கும் என சாஸ்திரம் கூறுகிறது. அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும்.

மேலும் அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதுவேஷம் எனும் உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும் நோய் ஏற்படும். இப்படி அன்னதோஷத்தாலும் அன்னதுவேஷத்தலும் பீடிக்கப்பட்டவர்களும் அன்னாபிஷேக நாளில் அன்னாபிஷேக கோலத்தில் பார்வை செய்வது அன்னதோஷம் நீங்கும். மேலும் உணவின் மீது வெறுப்படைய செய்யும் நோயான அன்னதுவேஷம் நீங்கும்.

ஜாதகப்படி அன்ன தோஷமும் அன்ன துவேஷமும் யாருக்கு?

ஜோதிடத்தில் அடிப்படை உணவின் காரகர் சந்திர பகவான் ஆவார். சுவையான உணவு வகைகளின் காரகர் சுக்கிரன் ஆவார். உணவினை குறிக்கும் போஜன ஸ்தானம் எனப்படுவது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபம் மற்றும் ஜாதக இரண்டாம் பாவமாகும். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் அடைவதும் சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

1. சந்திர பகவான் ஒருவர் ஜாதகத்தில் 6/8/12 தொடர்புகள் பெற்றோ அல்லது பாதகாதிபதி தொடர்பு பெற்று அல்லது நீசமடைந்து நிற்க அவர்களுக்கு பால், தயிர், அரிசி சோறு போன்ற பொருட்களை 
அடிக்கடி வீணடிப்பதால் அன்னதோஷம் ஏற்படும்.

2. கால புருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபத்திலும் உணவை குறிக்கும் சந்திரனின் ஆட்சிவீடான கடகத்திலும் அசுப கிரகங்கள் நிற்க அஞ்சாமல் உணவுப்பொருட்களை வீணடிப்பார்.

3. ஒரு ஜாதகரின் இரண்டாம் பாவத்தில் சூரியன் அசுப தொடர்பு பெற்று அல்லது பாதகாதிபதியாகி நிற்க கோதுமை மற்றும் கோதுமையில் செய்த உணவு பொருட்கள், தக்காளி, கேரட் போன்ற காய்கறிகள், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை வீணாக்கிடுவார். அதுவே காலபுருஷனுக்கு 6/8/12ம் வீடாக மேற்கண்ட உணவுகளை வெறுத்து ஒதுக்குவார்.

4. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க அந்த ஜாதகர் ஊறுகாய், வடான், வத்தல் வகைகள், சூடான சாப்பாடு வகைகளைக் கூட வீணாக்கிடுவார். காரம் என்ற காரணத்தை காட்டி ஆகாரத்தை வீணடிப்பார்.

5. ஒருவர் ஜாதகத்தில் புதன் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க பசுமையான காய்களை சமைக்காமலேயே வீணக்கிடுவார். மேலும் தேவைக்கு அதிகமாக நொறுக்கு தீனிகளை வாங்கி வீணடிப்பதும் இவர்கள்தான்.

6. ஒருவர் ஜாதகத்தில் குரு அசுபராகி இரண்டில் நிற்க நெய்யில் செய்த இனிப்பு வகைகள், பழங்கள் முதலியவற்றை வீணடிப்பார்.

7. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் அசுபராகி இரண்டாம் பாவத்தில் நிற்க விருந்து மற்றும் உணவகங்களில் உண்டு வீட்டு உணவுகளை வீணடிப்பார்.

8. ஒருவர் ஜாதகத்தில் சனி இரண்டாம் பாவத்தில் அசுப தொடர்பு பெற்று நிற்க எண்ணெய்யில் பொறித்த உணவுகள் கிழங்கு வகைகள் அளவுக்கதிகமாக செய்து வீணடிப்பார். மேலும் பழைய உணவுகளை உண்டு உடம்பைக் கெடுத்துக்கொள்வர்.

9. ஒருவர் ஜாதகத்தில் ராகு இரண்டாமிடத்தில் நிற்க மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்டு பாரம்பரிய உணவுகளை வீணடிப்பார்.

10. ஒருவர் ஜாதகத்தில் இரண்டில் கேது நிற்க இவருக்காக உணவு செய்து வருந்துவதுதான் மிச்சம். உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடைசியில் ஏதோ ஒரு பழைய உணவை உண்டுவிடுவார்.

11. துலா லக்னமாக இருந்து தர்மகர்மாதிபதியான சந்திரன் இரண்டாம் பாவத்தில் நீசம் பெற்றால் விருந்து என்ற பெயரில் உணவு பொருட்களை வீணடிப்பார்.

12. எந்த ராசி நேயர்களாக இருந்தாலும் சந்திராஷ்டம தினங்களில் சாப்பிடாமல் வீணடிப்பார்.

அன்னதோஷத்தை போக்கும் பரிகாரங்கள்

1. அன்னாபிஷேக நாள்/சந்திர பலம் நிறைந்த பௌர்ணமி, ரோகினி நக்ஷத்திரம், திங்கட்கிழமை போன்ற நாட்களில் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் சோழன்மாளிகை ஹரிச்சந்திர புரத்தில் குடிகொண்டுள்ள அருள்மிகு செளந்திரவல்லி சமேத சந்திரமெளீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கி வர உணவு பிரச்னை மட்டுமல்லாது சகல சந்திர தோஷத்தில் இருந்தும் விடுபடுவது நிதர்சனம். அபிஷேகம் மற்றும் சந்திர தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்ய திரு சபாபதி குருக்கள் அவர்களை 9944664144 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்னேற்பாடுகள் செய்துகொண்டு செல்லலாம்.

2. அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்குத் தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி (பச்சரிசி) வாங்கி கோயிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்துபேருக்கு போஜனம் அளிப்பது.

2. உணவுப்பொருட்களைக் குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரன் இருவரையும் குறிக்கும் ஸ்ரீ அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

3. சுக்கிரனின் அதிதேவதை மற்றும் சந்திர சகோதரியான தான்யலக்ஷமியை வணங்கிவர உணவு வீணாவது குறையும்.

4. அவரவர்கள் கிராம தேவதைக்குப் பொங்கல் வைத்து வழிபட உணவு வீணாவது குறையும்.

5. அந்தந்தவருட தான்யாதிபதியை பஞ்சாங்கபடி வணங்கிவர உணவுப் பஞ்சம் நீங்குவதோடு உணவு வீணாவதும் குறையும்.

6. உலகத்துக்கே படியளந்துவிட்டு படியை தலையில் வைத்துப் படுத்திருக்கும் சுக்கிர ஸ்தல மூர்த்தி ஸ்ரீரங்கநாதரை வணங்கிவர உணவு வீணாவது குறையும்.

7. முன்னோர்களின் திதி நாட்களில் பிராமணர்களுக்கு போஜனம் அளிப்பது அன்ன தோஷத்தோடு பித்ரு தோஷத்தையும் போக்கும். இவ்வளவு சிறப்பு பெற்ற சுக்கிரனின் மாதமான ஐப்பசி மாதத்தில் சுக்கிரனின் நாளான வெள்ளிக்கிழமையில் சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் சுக்கிரனும் சந்திரனும் சம சப்தமமாக பார்வை பெற்ற தினத்தில் அமைந்த அன்னாபிஷேக நாளில் அம்மையப்பரை தரிசித்து தாயின் ஆசியையும் குடும்ப மகிழ்ச்சியும் பெற்று உணவு பஞ்சம் நீங்கி சகல சந்தோஷமும் பெற்று வாழ்வோமாக!

அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

Source: dinamani