Press "Enter" to skip to content

ராகவேந்திர பிருந்தாவனத்தில் பௌர்ணமி பூஜை

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் உற்சவர்களுக்கு மகா தீபாராதனை செய்த பீடாதிபதி ரகோத்தம சுவாமி.

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, புதன்கிழமை சத்யநாராயண பூஜை, பௌர்ணமி பூஜை ஆகியவை நடைபெற்றன.
விழாவை முன்னிட்டு, பிருந்தாவன வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.
பிருந்தாவன வளாகத்தில் உள்ள ராகவேந்திரர், ஆஞ்சநேயர், நந்தி பகவான் உள்ளிட்ட சந்நிதிகளில் உள்ள சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு தவயோக வனத்தில் இருந்து வந்த பீடாதிபதி ரகோத்தம சுவாமி மேளதாளத்துடன், பஜனை கோஷ்டியினரின் பாடல்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவர் பிருந்தாவனத்தின் முன்புறம் அமைக்கப்பட்ட வேள்வி பூஜையை தொடங்கி வைத்து, அனைத்து சந்நிதிகளிலும், மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சத்யநாராயணர், ஆஞ்சநேயர், ராகவேந்திரர் ஆகிய உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகளை செய்தார். பின்னர், மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தொழிலதிபர்கள் மாதவன், ராஜேந்திரன், குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதுராந்தகம், சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை நிர்வாகி ஏழுமலைதாசன் தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

 

Source: dinamani

Mission News Theme by Compete Themes.