Go to ...
RSS Feed

சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்


அன்னாபிஷேக அலங்காரத்தில் கங்கை கொண்ட சோழீஸ்வரர்.

ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, சிவாலயங்களில் புதன்கிழமை அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது.
இக்குறிப்பிட்ட நாளில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதன் மூலம் உயிரினங்கள் அனைத்தும் உணவு பெற்று வாழும் என்பது ஐதீகம். அதன்படி, காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு ஏரிகாத்த கைலாசநாதர் கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், பல்வேறு காய்கறிகள், வாழைப்பழம், ஆப்பிள், சாத்துக்குடி உள்ளிட்ட பழவகைகளால் கோயில் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேக – ஆராதனை நடைபெற்றன.
நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் அன்னாபிஷேகத்தில் சிவபெருமானை பார்வை செய்து வழிபட்டனர். அதுபோல், ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, காலை முதலே திரளான பக்தர்கள் ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், முக்தீஸ்வரர், கூழமந்தல் கங்கைகொண்ட சோழீஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மாமல்லபுரம் 
மல்லிகேஸ்வரர் கோயிலில்…
மாமல்லபுரத்தில் உள்ள மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு 25 கிலோவில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. 
மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை அருகில் உள்ள இக்கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி, மல்லிகேஸ்வரிக்கும், மல்லிகேஸ்வருக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
பின்னர் 25 கிலோவில் அன்னத்தைக் கொண்டும், பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டும் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மல்லிகேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் செய்திருந்தனர். 
சிவா-விஷ்ணு கோயிலில்…
திருவள்ளூர் அருகே சிவா-விஷ்ணு ஜலநாராயண கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அன்னத்தால் சாத்துப்படி மற்றும் காய்கறிகளால் அமைக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் புஷ்பவனேஷ்வர் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 
திருவள்ளூர் பூங்கா நகரில் பிரசித்தி பெற்ற சிவா-விஷ்ணு ஜலநாராயண கோயிலில் உள்ள புஷ்பவனேஷ்வர் சுவாமிக்கு ஆண்டுதோறும் ஐப்பசி பெளணர்மியை முன்னிட்டு மகா அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கமாகும். 
அந்த வகையில் புஷ்பவனேஷ்வருக்கு அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சிவபெருமானுக்கு அன்னத்தால் சாத்துப்படி மகா அபிஷேகம் மற்றும் பல்வேறு வகையான காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதையடுத்து, சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சிவபெருமானுக்கு சாத்திய காய்கறிகளும் அன்னதானமும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சிவா-விஷ்ணு ஜலநாராயண கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதேபோல், திருவள்ளூர் காந்தி சாலையில் உள்ள காளிகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோயிலில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Source: dinamani