Press "Enter" to skip to content

தீபாவளியன்று செய்ய வேண்டிய கங்காஸ்நானமும், சொல்ல வேண்டிய ஸ்லோகமும்! 

 

தீபாவளி குளியல் என்பது கங்கை நதியில் குளிப்பதற்கு ஒப்பாக கருதப்படுவதால் இது கங்காஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது.

தர்மசாஸ்திர மூலகிரந்தங்களான விஷ்ணுபுராணம், ஸ்ம்ருத்யர்த்தஸாரம், ஸ்ம்ருதிரத்னம், காலாதர்சத்திலும், ஸாரஸங்க்ரஹத்தில் ஆஸ்வீஜ மாதத்தில் சூரியன் சுவாதியில் நிற்க, சந்திரன் சுவாதியில் வரும் நாளில் குளித்தல் லக்ஷ்மீகராமனது.

சில வருடங்களில் மட்டுமே சூரியன் சுவாதியில் நிற்க தீபாவளி நிகழும், ஏனெனில் சூரியன் துலா (ஐப்பசி) தமிழ் மாதத்தில் மட்டுமே சுவாதியில் இருப்பார். ஐப்பசி மாத துவக்கத்தில் அல்லது முடிவில் சாந்திரமான ஆஸ்வீஜ மாத அமாவாசை ஏற்படின் நட்சத்திர மாறுதல் இருக்கும்.

ஆல், அரசு, புரசு, அத்தி, மாவலிங்கம் ஆகிய ஐந்து மரங்களின் பட்டைகளையும் தண்ணீரில் சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கொதிக்கவைத்து வெந்நீர் தயார் செய்ய வேண்டும். காய்ச்சிய நல்லெண்ணையை உச்சந்தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் தடவி சற்று ஊறவேண்டும்.

பிரம்மன் காத்தல் நிலையில் (ரக்க்ஷை) “நாயுருவி”  செடி வடிவில் இருக்கிறார். இந்த நாயுருவி செடியால் தலையை மூன்று முறை தடவியநிலையில் வலமாக சுற்றி கால்படாமல் பெருமரத்தின் அடியில் சேர்த்து பின்னர் கங்கை, லக்ஷ்மியை தியானித்து தலைக்கு குளித்தல் வேண்டும்.

குறிப்பு: தலைக்கு தடவிய மீதம் உள்ள எண்ணையால் (கைகளால்) உடலில் மற்ற பகுதிகளை தொடுவது கூடாது. இத்தினத்தில் நீரில் கங்கையும், எண்ணையில் ஸ்ரீலக்ஷ்மி வசிப்பாள் என்கிறது சாஸ்திரம்.

“தைலே லக்ஷ்மீர் ஜலேகங்கா தீபாவளிதினே வஸேத்’

கங்காஸ்நானத்திற்கு பின்னர் தீபம் ஏற்றி புத்தாடைகள் உடுத்தி சம்பிரதாயப்படி விபூதி, நாமம் இட்டு தங்க நகைகள் பூண்டு லக்ஷ்மி நாராயணனை வணங்கி செல்வ செழிப்புடன் ஆரோக்கியத்துடன்

விளங்க பிராத்தித்து லக்ஷ்மி, விஷ்ணு எட்டுோத்திரம் வாசித்து தீபாவளி லேக்கியம், இனிப்பு பலகாரவகைகள், பழங்களை படைத்து கற்பூர தீபம் காண்பித்து அங்கம் புழுதிபட சேவித்து பின்னர் லேக்கியத்தையும் இனிப்புகளையும் உண்டு வானவேடிக்கையில் ஈடுபடவேண்டும். பெரியவர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்தி அவர்களின் ஆசியை பெறுதல் மிகவும் முக்கியமானதாகும்.

அவலக்ஷ்மி நீங்கி லக்ஷ்மி கடாக்ஷம் பெருக பிராத்தனை செய்தல் வேண்டும் கீழ் கண்ட ஸ்லோகத்தைக் இறைவன் முன்நின்று கூறவேண்டும்.

“விஷ்ணோ: பாத ப்ரஸூதாஸி வைஷ்ணவீ விஷ்ணு தேவதா

த்ராஹி நஸ்த்வேனஸஸ் தஸ்மாத்  ஆஜன்ம மரணாந்திகாத்

திஸ்ர: கோட்யோர்த்த கோடீச  தீர்த்தானாம் வாயுரப்ரவீத்

திவி புவ்யந்தரிக்ஷே ச  தானிமே ஸந்து ஜாஹ்னவி’.

தாய் போன்ற கங்கா தேவி நீ மகாவிஷ்ணுவின் பாதத்தில் தோன்றி வைஷ்ணவியாகவும், விஷ்ணுவை அதிதேவதையாக உடையவளாகவும் விளங்குகிறாய். ஜனன – மரண இடைப்பட்ட காலங்களில் பாவங்களிலிருந்து எங்களைக் காத்தருள வேண்டும். தேவலோகம், பூமி, அந்தரிக்ஷம், மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதாக வாயு பகவான் கூறியுள்ளார். தங்கள் கருணையால் அவைகள் என்பொருட்டு இங்கு வந்து அருள வேண்டும்.

நீரின்றி அமையாது உலகம் எனும் வள்ளுவன் வாக்குப்படி “நீர்” மிக முக்கியமானதும் தாயார் போன்றதாகும். அந்த நீரை கங்கஸ்நானம் என செய்வதால் நல்லவை நடக்கும்.

கோ பூஜை (லக்ஷ்மிபூஜை):

பசுவிற்கு தானம்

பசுவை லக்ஷ்மி ஸ்வரூபமாக நினைத்து திலகம் இட்டு வணங்கி, கோதுமை தவிடு, வெல்லம் சிறிது கலந்து உணவாக தந்து வாலை தொட்டு வணங்கவும்.

மாலையில் தீபம்

மாலையில் லக்ஷ்மி கடாக்ஷ்ம் வேண்டும் என பிராத்தித்து சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் பூஜை அறையில் மற்றும் வீட்டு வாசலிலும் தீபம் ஏற்றி வழிபடவும்.

இந்தப் புனிதத்திருநாளில் நாம் எதற்காகப் பிறந்தோம்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் சிந்தித்து, நம்முடைய மனத்திலே நரகாசுரன் போன்ற தீய குணங்கள் எல்லாம் இருந்தால் அவற்றை அழிக்கக் கண்ணபிரானைப் பிரார்த்தித்து, மனிதன் தேவனாக மாற முடியாவிட்டாலும், மனிதனாகவாவது வாழ முயற்சி செய்து இறைவனுடைய அருளைப் பெறுவோமாக.

Source: dinamani

Mission News Theme by Compete Themes.