Press "Enter" to skip to content

நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு! 

திருப்பதி தேவஸ்தானம் லட்டுகளை இனி நெகிழி (பிளாஸ்டிக்) கவர்களுக்கு பதில் அட்டைப் பெட்டிகளில் வழங்க உள்ளது.

திருமலையில் கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் நெகிழி (பிளாஸ்டிக்) கவர்கள் உள்ளிட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களைப் பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்தது. அதன்படி திருமலையில் உள்ள கடை உரிமையாளர்கள் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள நெகிழி (பிளாஸ்டிக்) கவர்களை பயன்படுத்த முடியாது.

எனினும், கோயில் பிரசாதமான லட்டுகளை எடுத்துச் செல்லும் கவர் மட்டும் 50 மைக்ரானுக்கு மேல் உள்ளதால் அதற்கு மாற்றுத் தீர்வு காணும் வரை அவற்றைப் பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. தினசரி திருமலையில் 5 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

அவற்றைக் கொண்டு செல்ல ஒரு லட்சம் கவர்களை தேவஸ்தானம் விற்று வருகிறது. தற்போது லட்டு கவருக்கு மாற்றாக அட்டைப் பெட்டிகளை தயார் செய்துள்ளது. அதன்படி, ஒரு லட்டு, 2 லட்டுகள், 4 லட்டுகள் (175 கிராம் எடை வரை) கொள்ளும் அளவிலான, ஏழுமலையான் படங்கள், தேவஸ்தான முத்திரையுடன் கூடிய அட்டைப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் லட்டுகளை 10 நாள்களுக்கு மேல் வைத்து தேவஸ்தான தரப் பரிசோதனை நிலையத்தில் சோதித்துப் பார்க்கப்பட்டது. அதில் லட்டுகளின் தரமும், சுவையும் மாறாததால் அட்டைப் பெட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, பக்தர்களுக்கு 100 அட்டைப் பெட்டிகளில் லட்டுகள் வைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டன.

Source: dinamani

Mission News Theme by Compete Themes.