தொட்டதெல்லாம் துலங்க போகிறது சிம்ம ராசிக்காரர்களுக்கு! குருப்பெயர்ச்சி பலன்கள் 2019

தொட்டதெல்லாம் துலங்க போகிறது சிம்ம ராசிக்காரர்களுக்கு! குருப்பெயர்ச்சி பலன்கள் 2019

ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நடைபெற்றாலும் இந்தாண்டு குருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு 5-ல் இடம் பெயர்கிறார். இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அற்புத நிகழ்வாகும். 

குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். அந்தவகையில் சிம்ம ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி விரிவாகப் பார்ப்போம். 

சவால்களை வென்று சாதனை படைக்கும் சிம்ம ராசி அன்பர்களே ..!

[embedded content]

இதுவரை சுகஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இனி ஐந்தாம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலிருந்து தங்களுக்கு
அனைத்துவிதமான மகிழ்ச்சிகளைத் தரவிருக்கிறார். 

இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக மேம்படையும். குரு தான்நின்ற இடத்திலிருந்து பாக்கிய, லாப மற்றும் ஜென்ம ஸ்தானத்தையும் பார்க்கின்றார். மனதில் நினைத்த மற்றும் செய்யத் துவங்கிய அனைத்து காரியங்களும் வெற்றிபெறும். வீடு, மனை வாங்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு தகுந்த காலமாக இருக்கும்.

செய்தொழிலில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கி உங்களுக்குச் சேரவேண்டிய பங்கு கிடைத்துவிடும். அரசாங்க உதவிகள் பெறுவதற்கு ஏற்ற காலமாகும் இது. நீண்ட காலமாகத் தள்ளிக்கொண்டே சென்ற தீர்த்த யாத்திரைகளை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். மறைமுக நேர்முக எதிர்ப்புகள் விலகும்.

இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை பிரிந்திருந்த குடும்பத்தினர் ஒன்று சேருவார்கள். கடன் வாங்கியாவது தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வெளி வட்டார பழக்கவழக்கத்திலும் ஓரளவு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நெருங்கிய நண்பர்களிடம் எதையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆலயத் திருப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். 

இதுவரை செய்யாதிருந்த முயற்சிகளைச் சுலபமாகத் திட்டமிட்டுச்செய்து செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். சிலர் கடல்கடந்து வெளிநாடு சென்றுவரும் யோகத்தைப் பெறுவார்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு..

வேலைத் திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்கள் செயல்களைப் பாராட்டுவார்கள். விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டதுபோல் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். 

வியாபாரிகளுக்கு..

இந்த ஆண்டு துணிந்து முதலீடுகளைச் செய்து எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். மார்க்கெட்டிங் விவகாரம் உட்பட அனைத்து விஷயங்களையும் சாதகமாகவே முடிப்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். தொழிலில் இருந்த மந்தநிலை விலகும். 

விவசாயிகளுக்கு..

கூடுதல் விளைச்சலைக் காண்பார்கள். பழைய நிலங்களை விற்பனை செய்து அதன்மூலம் வரும் பணத்தில் புதிய நிலத்தை வாங்குவீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். வங்கிக் கடன் உதவிகளும் கிடைக்கப்பெறுவீர்கள். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகளுக்கு..

எடுத்த காரியங்களில் வெற்றிகள் ஏற்படும். அரசு அதிகாரிகள் உங்களிடம் அனுசரணையாக இருப்பார்கள். உங்கள் செயல்களை நன்றாக யோசித்து செய்யவும். கட்சி வேலைகளை நிதானத்துடனும், தொண்டர்களின் ஆதரவுடனும் செய்தால் தான் முடிவு விருப்பப்படி அமையும். கடினமான வேலைகளையும் வெற்றிகரமாக முடித்து புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். 

கலைத்துறையினருக்கு..

வாய்ப்புகள் கூடத் தொடங்கும். திறமைகள் பளிச்சிடும். உங்கள் துறையில் ஆராய்ச்சி செய்வீர்கள். அதேநேரம் சக கலைஞர்களிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள். 

பெண்மணிகளுக்கு..

பணவரவு சீராக இருக்கும். கணவரிடம் பதமாக நடந்துகொள்ளவும். குடும்பத்தில் நடக்கும் சில விஷயங்களைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லது. விட்டுக்கொடுத்து அனைத்துக் காரியங்களையும் சாதித்துக் கொள்ளவும். சகோதர, சகோதரிகளும் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகச் சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். 

மாணவமணிகளுக்கு..

வம்புகளிலும், வீண் பேச்சுகளிலும் கலந்துகொள்ள வேண்டாம். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படியுங்கள். உங்களின் தன்னம்பிக்கையைக் கூட்டிக்கொண்டு செயலாற்றுங்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வர அதீத நன்மைகள் கிடைக்கும். 

Source: dinamani

Author Image
murugan