Press "Enter" to skip to content

கன்னி ராசிக்கு இந்தாண்டு குருப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது?

ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நடைபெற்றாலும் இந்தாண்டு குருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு 5-ல் இடம் பெயர்கிறார். இது கிட்டத்தட்ட 12  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அற்புத நிகழ்வாகும். 

குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். அந்தவகையில் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 

கடமை தவறாத கன்னி ராசி அன்பர்களே! 

[embedded content]

இதுவரை தைரிய ஸ்தானமான 3-ம் வீட்டில் இருந்த குருபகவான் வருகின்ற குருப்பெயர்ச்சியில் நான்காம் இடமான சுகஸ்தானத்திற்குப் பெயர்ச்சி அடைகின்றார். இந்த  காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். 

செய்தொழில் எந்த முடக்கமுமின்றி சீராக நடக்கத் தொடங்கும். வருமானம் படிப்படியாக உயரும். ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். புதிய அனுபவங்கள் பலவகையிலும்  உண்டாகும். பலமுறை தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நேரம் போதவில்லை என்று சொல்லுமளவுக்கு வேலை வரத்  தொடங்கும். 

அசையா சொத்து விஷயத்தில் இருந்துவந்த கஷ்ட நஷ்டங்களும், இழப்பும் இனி தொடராது. இல்லத்திற்குத் தேவையான நவீன ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.  ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் புகழ், கெளரவம்,  அந்தஸ்து ஆகியவை உயர்ந்தே காணப்படும். 

பொருளாதாரத்தில் உயர்நிலையை எட்டுவீர்கள். பாராட்டும், பணவரவும் பலவழிகளிலிருந்து வந்தவண்ணம் இருக்கும். செயற்கரிய சாதனைகளில் இறங்கி முழுமையான  வெற்றியைப் பெறுவீர்கள். வழக்குகளில் சிக்கித் தவித்தவர்கள் தெய்வானுகூலத்தினால் விதிவிலக்கு கிடைக்கப்பெற்று முழுமையாக விடுபடுவீர்கள். சமுதாயத்தில்  உயர்ந்தவர்களின் உதவியும், பாதுகாப்பும் கிடைக்கும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் விலகும். 

கைநழுவிப் போன வாய்ப்புகள் திரும்ப கைக்கு வந்துசேரும். உடன்பிறந்தோரின் வழியில் பாசம் அதிகரிக்கும். குடும்பத்துடன் தீர்த்த யாத்திரை சென்று வருவீர்கள்.  சுறுசுறுப்பாகச் செயல்பட்டு கடந்தகால மாபெரும் இழப்புகள் அனைத்தும் சரிக்கட்டும் காலமாக இது அமையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு..

வேலையில் இருந்துவந்த பளு குறையும். இருப்பினும் திட்டமிட்டு வேலைகளை முன்கூட்டியே செய்யவும். இந்த காலகட்டத்தில் சற்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள். மற்றபடி மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து  முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு..

வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். கடுமையாக உழைத்து எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளையும் புகுத்துவீர்கள். இருப்பினும்  வண்டி, வாகனங்களுக்கும் சிறிது பராமரிப்புச் செலவுகளையும் செய்ய நேரிடும். மற்றபடி நண்பர்கள், கூட்டாளிகள் உங்களுக்குப் பக்கபலமாகவே இருப்பார்கள். 

விவசாயிகளுக்கு..

விளைச்சலில் இருந்த சிக்கல்கள் மறைந்து மகசூல் எதிர்பார்த்தபடி இருக்கும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை இடையிடையே பயிர் செய்து லாபத்தைப்  பெருகிக்கொள்ளவும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாகவே முடியும். புதிய பூமி வாங்கும் யோகம் உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு..

இந்த குருப்பெயர்ச்சி அனுகூலமான திருப்பங்களை ஏற்படுத்தும். எதிரிகளின் தொல்லை வராது என்றாலும் கவனமாக இருக்கவும். அதோடு பேசும் நேரத்தில் எச்சரிக்கையுடன்  ஜாக்கிரதையாகவும் பேசவும். குறிப்பாக மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். 

கலைத்துறையினருக்கு..

திறமைகள் பளிச்சிடும். உங்களின் படைப்புகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்து வரவேற்புகளைப் பெறும். உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். கடந்த காலங்களில் கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் உங்களைத் தேடி வரும். 

பெண்மணிகளுக்கு..

இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். தடைபட்டுவந்து திருமணம் சிறப்பாக நடந்தேறும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். அதே நேரம் குடும்ப  சொத்து விஷயங்களில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாக வாய்ப்பில்லை. உங்கள் கருத்துகளை ரகசியமாக வைத்துக்கொள்வது நல்லது. மற்றபடி கணவர் தேவையான  ஒத்துழைப்பைக் கொடுப்பார். 

மாணவமணிகளுக்கு..

வம்புகளிலும், வீண் பேச்சுகளிலும் கலந்துகொள்ள வேண்டாம். தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படியுங்கள். 

பரிகாரம்: மாதம்தோறும் வரும் ஏகாதசியில் விரதம் இருந்து துளசியால் மகாவிஷ்ணுவைப் பூஜித்துவரச் சகல நன்மைகளையும் பெறுவீர்கள்.

Source: dinamani

More from ஆன்மிகம்More posts in ஆன்மிகம் »