Press "Enter" to skip to content

தமிழகத்திலும் லவ் ஜிகாத்: பட்டியலினத்தோர் ஆணையத் துணைத் …3 நிமிட வாசிப்புதமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவுவதாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்த…

தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவுவதாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பாலக்கரை மண்டல பாஜக செயலாளராக இருந்த விஜயரகு, கடந்த 27ஆம் தேதி காந்தி மார்க்கெட் அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். விஜயரகுவின் கொலைக்குக் காரணம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என பாஜக தலைவர்கள் குற்றம்சாட்ட, மதப் பிரச்சினை காரணமல்ல என்று காவல் துறை மறுத்தது. மகளின் காதல் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மிட்டாய் பாபு என்பவர்தான் விஜயரகுவைக் கொலை செய்ததாக தகவலும் வெளிவந்தது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட விஜயரகு பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் நேற்று (ஜனவரி 29) அவரது இல்லத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, விஜயரகுவின் தாயார், மனைவி ஆகியோர் கதறி அழுதவாறே அவரிடம் நடந்தவற்றை விவரித்தனர்.

image

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கேரளாவில் லவ் ஜிகாத் என்னும் முறையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் அதுபோன்ற கலாச்சாரம் பரவி வருகிறது. விஜயரகு சிஏஏவுக்கு ஆதரவாகப் பல போராட்டங்களில் கலந்துகொண்டதால் அவரது கொலைக்கு அதுவும் ஒரு காரணமாகிவிட்டதாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். குறிப்பாக 17 வயது விஜயரகுவின் மகளிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய முயன்றதில் ஏற்பட்ட பிரச்சினைதான் கொலையில் முடிந்ததாகத் தெரிவித்தனர். இதுதொடர்பான முழுமையான அறிக்கை பட்டியலினத்தோர் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே கொலையாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இந்த நிலையில் மிட்டாய் பாபு உட்பட இரண்டு பேரை காவல் துறையினர் சென்னையில் வைத்து கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »