Press "Enter" to skip to content

ஓ.ராஜா மீண்டும் பதவியேற்பு!2 நிமிட வாசிப்புதேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா இன்று (ஜனவரி 30) மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்…

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா இன்று (ஜனவரி 30) மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைப் பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை தனியாக அறிவித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அம்மாசி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கடந்த 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஓ.ராஜா மற்றும் 17 உறுப்பினர்களின் நியமனத்தை ரத்துசெய்தனர்.

இந்த சூழலில் அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் ஓ.ராஜா. தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று தேனியிலுள்ள என்.டி.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார். ஆவின் தலைவராக ஓ.ராஜாவும், துணைத் தலைவராக செல்லமுத்துவும், அத்தோடு 21 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் தேனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »