Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 1596 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று காலடி எடுத்து வைத்தது. அதன்பின் மெதுவாக பெரும்பாலான மாநிலங்களில் கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதம் முழுவதும் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 80-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் ஏப்ரல் 12-ந்தேதி உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

ஏப்ரல் 14-ந்தேதியில் இருந்து எண்ணிக்கை சற்று குறைய ஆரம்பித்தது. இதனால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்து விட்டதாக கருதப்பட்டது. ஏப்ரல் 14-ந்தேதி 31 பேருக்கும், 15-ந்தேதி 38 பேருக்கும், 16-ந்தேதி 25 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

ஆனால் 17-ந்தேதி மீண்டும் உயர ஆரம்பித்தது. அன்று 56 பேருக்கும், 18-ந்தேதி 49 பேருக்கும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் 19-ந்தேதி 105 என ஒரேயடியாக உயர்ந்தது. ஆனால் நேற்று 43 ஆக குறைந்து மீண்டும் நம்பிக்கை அளித்தது.

இந்நிலையில் இன்று புதிதாக 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 635 பேர் குணடைந்துள்ளனர் என்றும், 18 பேர் பலியாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »