Press "Enter" to skip to content

அடுத்த ஆண்டு ஜூலை வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடையாது

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட மாட்டாது என மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-21ம் நிதியாண்டில், 1.13 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது. 

ஆனால், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஏராளமான நிதி தேவைப்படுவதால், மத்திய அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எம்பிக்களின் சம்பளம் குறைப்பு, எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தது. 

அந்த வரிசையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட மாட்டாது என மத்திய நிதித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ளபடி, 17 சதவீதம் என்ற அளவிலேயே அகவிலைப்படி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் வரையிலான 3 மாத அரியர் தொகையும் கிடைக்காது.

இந்த நடவடிக்கையானது, 2020-2021 மற்றும் 2021-2022 நிதியாண்டுகளில் ரூ.37,350 கோடியை மிச்சப்படுத்த உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதேபோன்ற நடவடிக்கையை மாநிலங்கள் பின்பற்றினால் மாநிலங்களுக்கு ரூ.82,566 கோடியை மிச்சப்படுத்தும். இதன்மூலம் ஒருங்கிணைந்த சேமிப்பு ரூ.1.20 லட்சம் கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »