Press "Enter" to skip to content

மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு- எடப்பாடி பழனிசாமி திறந்து விடுகிறார்

காவிரி டெல்டா பாசன குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தண்ணீர் திறந்து விடுகிறார்.

சேலம்:

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறித்து கடந்த மே 18-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி. அடியாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும்.

எனவே, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்றும், மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சி உள்பட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் 2 மணிக்கு சாலை மார்க்கமாக சேலத்துக்கு புறப்பட்டு சென்றார்.

இன்று காலை 9.50 மணியளவில் சேலம் முகாம் அலுவலகத்தில் இருந்து அவர் சேலத்தில் குரங்குச்சாவடியில் விழாப் பகுதிக்குச் செல்கிறார். அங்கு நெடுஞ்சாலை பாலத்தை காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். பின்னர் சேலம் முகாம் அலுவலகத்துக்கு செல்கிறார்.

12-ந் தேதி (நாளை) சேலம் முகாம் அலுவலகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்படுகிறார். மேட்டூர் அணையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு காலை 9.30 மணிக்கு செல்கிறார். பின்னர் காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை நெல் சாகுபடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தண்ணீரை திறந்துவிடுகிறார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »