Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு சிகிச்சை தராவிட்டால் நடவடிக்கை- ஆஸ்பத்திரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

மத்திய அரசு சுகாதார திட்டத்தின் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பட்டியலிடப்பட்டுள்ள ஆஸ்பத்திரிகள், பயனாளிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

சி.ஜி.எச்.எஸ். என்ற பெயரில் மத்திய அரசு சுகாதார திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் கவர்னர்கள் மற்றும் துணை கவர்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், முன்னாள் துணை ஜனாதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளின் இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள், டெல்லி போலீசார், ரெயில்வே வாரிய பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் பலன் பெற்று வருகிறார்கள்.

இவர்கள் சிகிச்சை பெறுவதற்காக சி.ஜி.எச்.எஸ். திட்டத்தின் கீழ் பல ஆஸ்பத்திரிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த ஆஸ்பத்திரிகள் மத்திய அரசு சுகாதார திட்டத்தின் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக புகார்கள் சென்றன. குறிப்பாக தனியார் ஆஸ்பத்திரிகளில், நோய் அறிதல் மையங்களில் (டயாக்னஸ்டிக் சென்டர்கள்)இவர்கள் சிரமங்களை அனுபவிப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக ஒரு உத்தரவை மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரிகள் என்று மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள சி.ஜி.எச்.எஸ். திட்ட ஆஸ்பத்திரிகள் அனைத்தும், மத்திய அரசு சுகாதார திட்ட பயனாளிகளுக்கு திட்ட விதிமுறைகளுக்கு இணங்க சிகிச்சை அளிக்க வேண்டும்.

அதே போன்று கொரோனா ஆஸ்பத்திரிகள் என்று அறிவிக்கப்படாத சி.ஜி.எச்.எஸ். திட்ட ஆஸ்பத்திரிகள் சிகிச்சை வசதிகளை அளிக்கவோ, பயனாளிகளை சேர்க்கவோ மறுக்க கூடாது. மேலும் அவற்றுக்கு விதிமுறைகளின்படி கட்டணம் வசூலிக்கலாம். எல்லா சிகிச்சைக்கும் இது பொருந்தும்.

இந்த உத்தரவை மீறினால், அந்த ஆஸ்பத்திரிகள் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின்கீழ் 36 லட்சம் பேர் தற்போது பலன் அடைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »