Press "Enter" to skip to content

ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமானது என்பதால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீர் திறந்து வைத்தார்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு 90 நாட்கள் நீர் திறந்து விடப்படும். 5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் அணையின் உபரி நீரைக்கொண்டு சேலத்தில் ஜனவரிக்குள் 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

நாமக்கல்லில் ராஜவாய்க்கால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. பாசன பரப்பை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடைமடை வரை நீர் சென்று சேர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குடிமராமத்து பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. குடிமராத்து பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளில் 1,433 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சரபங்கா ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.

8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம். போக்குவரத்து அதிகம் அடைந்துள்ளதால் சாலைகள் விரிவாக்கம் அவசியம். தேவைக்கேற்ப நிலத்தை கையகப்படுத்தி சாலைகள் அமைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளை அமைக்க உள்கட்டமைப்பு அவசியம்.

சென்னையில்  மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை . கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதை மக்கள் தவிர்ப்பது வேதனையளிக்கிறது. பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றி வருகின்றனர். நோய்த்தொற்று யாருக்கு வரும் என்பது குறித்து சொல்ல முடியாது. மருத்துவர்கள் தொடர்ந்து அயராது பணியாற்றி வருகிறார்கள். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »