Press "Enter" to skip to content

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ரிஹானா, கிரேட்டா தன்பெர்க்

டெல்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து பாடகி ரிஹானா, கிரேட்டா தன்பெர்க் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

இதனையடுத்து குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஹானா, “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே போல் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க், தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே விவசாயிகளின் போராட்டம் குறித்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரின் பதிவுகளால் டெல்லியில் நடைபெறும் போராட்டம் மேலும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »