Press "Enter" to skip to content

சென்னையில் 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி- தேர்தல் அதிகாரி தகவல்

சென்னையில் 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை:

சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ் தலைமை தாங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் விளக்கி கூறினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் தொடர்பாக நடைபெற்ற இந்த அனைத்து கட்சி கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், தேர்தல் பிரசாரத்தின்போது பொதுகூட்டம், பேரணி நடத்துவது தொடர்பாக அனுமதி வாங்குவது குறித்தும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளதால், அச்சகத்தின் பெயர் இல்லாமல் பேனர், பிரசுரம் அடிக்க கூடாது. மேலும் சென்னையை பொறுத்தவரை 196 இடங்களில் மட்டுமே பொது கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும்.

தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்த குறைந்தபட்சம் 48 மணி நேரத்துக்கு முன்னர் அனுமதி பெறவேண்டும். பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி பெற இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவௌி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

சென்னையில் ஏறக்குறைய 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாற்றுதிறானளிகள், ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு தபால் மூலம் வாக்களிக்க வரும் 16-ந் தேதிக்குள் ‘12-டி’ படிவத்தை பூர்த்தி செய்து தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும்.

பொதுமக்கள், தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1800 425 7012 என்ற இலவச எண்ணையும், வாக்களர்களுக்கான சந்தேகங்களை 1950 என்ற சேவை மையம் எண் மூலம் தெரிவிக்கலாம். சென்னை மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 721 சுவரொட்டிகள், 9 ஆயிரத்து 561 சுவர் விளம்பரங்கள், 239 ‘சுவரொட்டிகள்’ என மொத்தம் 12 ஆயிரத்து 366 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 48 பறக்கும் படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 10 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »