Press "Enter" to skip to content

கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி வருகிறோம்: கே.என். நேரு

புதிய சின்னங்களை மக்களிடன் கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படும். கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி வருகிறோம் என கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட் பல கட்சிகள் உள்ளன.

ஒவ்வொரு கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3 இடம்), மனிதநேய மக்கள் கட்சி (2 இடம்) ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. யூனியன் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிடும் என அறிவித்துவிட்டது. மனிதநேய மக்கள் கட்சி சின்னம் குறித்து இன்னும் முடிவாகவில்லை எனத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் 4 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விடுதலை சிறுத்தைகள், மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனத் தெரிவித்துள்ளன. ஒருவேளை தனிச்சின்னம் கொடுத்தால் தேர்தலுக்குப்பின் சிக்கல் ஏற்படுமோ? என திமுக யோசிப்பதாக தெரிகிறது. மேலும் இரட்டை இலையை எதிர்த்து உதயசூரியன் நின்றால் கூடுதல் பலமாக அமையும் எனவும் நினைக்கிறது.

இதனால் எந்தச்சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக போட்டியிடும் என்பதே பிரதான கேள்வியாக உள்ளது. இதுகுறித்து திமுக தொகுதி பங்கீடு குழுவில் இடம் பிடித்துள்ள கேஎன் நேருவிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது கேஎன் நேரு ‘‘புதிய சின்னங்களை மக்களிடன் கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படும். கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி வருகிறோம்’’ என்றார்.

விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிட்டால்தான் கட்சி அங்கிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதால் அதில் உறுதியாக இருக்கிறது. இதனால் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே செல்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »