Press "Enter" to skip to content

மாநிலங்களவை தேர்தலை நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது – சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

கேரளாவில் மாநிலங்களவை தேர்தலை நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 21-ந்தேதி முடிவடையும் நிலையில், அந்த பதவிகளுக்கு வருகிற 12-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஆனால் மத்திய அரசு சில பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, இந்த அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரியும் இது தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று கேரளா வந்த அவர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் சட்டசபை தேர்தல் முடியும் வரை மாநிலங்களவை தேர்தலை நடத்தக்கூடாது என மத்தியில் ஆளும் பா.ஜனதா விரும்புகிறது. சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் சட்டசபை இடங்களில் மாற்றம் வரும் என அந்த கட்சி கருதுகிறது.

ஏனெனில் கேரளாவில் காலியாகும் 3 மாநிலங்களவை இடங்களில் 2-ஐ ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வைத்திருக்கிறது. எனவே அதை மாற்றுவதற்கு இந்த சூழ்ச்சியை பா.ஜனதா பயன்படுத்துகிறது.

ஆனால் தேர்தல் கமிஷன் சுதந்திரமாகவும், எந்தவித அழுத்தங்களுக்கு அடிபணியாமலும் இருக்க வேண்டும். மாநிலங்களவை தேர்தலை தள்ளி வைத்திருப்பது வினோதமாகவும், சந்தேகம் அளிக்கும் வகையிலும் உள்ளது. இந்த முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது ஆகும்.

கேரளாவில் முன்னெப்போதும் இல்லாதவகையில் தேசிய பேரிடர்கள் நிகழ்ந்தபோதும் கடந்த 5 ஆண்டுகளில் மாநில அரசு அனைத்து நிலைகளிலும் சிறப்பாக செயலாற்றியது. மேலும் மத்திய அரசின் கடுமையான விரோதப்போக்கை எதிர்கொண்டது. அற்பமான நிதியையே மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்கியது.

காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே இந்துத்துவா தொடர்பான போட்டி நிலவுகிறது. இந்துத்துவா கோஷங்களை எழுப்பி, மக்களை பிரிப்பதில் பா.ஜனதாவை விட காங்கிரஸ் அதிகமாக ஈடுபடுகிறது.

ஆனால் அரசியலில் இருந்தும், அரசில் இருந்தும் மதத்தையும், நம்பிக்கையும் வேறுபடுத்துவதில் இடதுசாரிகள் உறுதியாக இருக்கின்றன. இவ்வாறு மதசார்பின்மைக்கு பக்கம் இருப்பதால் பா.ஜனதாவால் இடதுசாரிகள் குறிவைக்கப்படுகின்றன.

சபரிமலை விவகாரத்தை பொறுத்தவரை அது கோர்ட்டில் விசாரணையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வேறு பிரச்சினைகள் இல்லாததால், சபரிமலை விவகாரத்தை மற்ற கட்சிகள் எழுப்புகின்றன.

இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »