Press "Enter" to skip to content

அ.தி.மு.க. வேட்பாளரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடி பணம் சிக்கியது

மணப்பாறை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மணப்பாறை:

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேட்பாளர்களும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணத்தை இடமாற்றம் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறையும் களமிறங்கியுள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் அரசியல் கட்சியினரின் நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள், கோடிக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அருகே பெட்டவாய்த்தலை பகுதியில் சாலையோரம் சாக்கு மூட்டையில் வீசப்பட்டு கிடந்த ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கைப்பற்றிய வருமான வரித்துறையினர் அ.தி.மு.க. பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல் துறை சூப்பிரண்டு ராஜன் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட 8 காவல் துறை நிலையங்களில் பணிபுரியும் காவல் துறைகாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணப்பட்டுவாடா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மற்றும் மாநகர காவல் துறை கமி‌ஷனர் லோகநாதன் ஆகியோரது உத்தரவின் பேரில் அதிரடி சோதனை நடத்தி பட்டுவாடா செய்யப்பட்ட ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலான பணக்கவர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதில் ஆய்வாளர், துணைஆய்வாளர் உள்பட 6 காவல் துறையினர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். தி.மு.க. வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அவர்களும் உடனடியாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள் திருச்சி அருகே நேற்று நள்ளிரவில் ரூ.1 கோடி பணம் சிக்கியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வலசுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் மணப்பாறை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரிடம் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி வருமான வரித்துறை துணை கமி‌ஷனர் மதன்குமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 3 குழுக்களாக நேற்று இரவு மணப்பாறைக்கு விரைந்தனர்.

இதில் வலசுப்பட்டியில் உள்ள அழகர்சாமியின் வீட்டில் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள் அனைத்து அறைகளிலும் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். இதில் ஒரு அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி பணத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். அதில் 20 ஆயிரம் எண்ணிக்கையில் 500 ரூபாய் தாள்க்கள் இருந்தன. அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

இதுபற்றி அழகர்சாமியிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக கூறியதுடன் தடுமாற்றத்துடன் காணப்பட்டார். இதையடுத்து அந்த பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் அழகர்சாமி மீது வருமான வரித்துறையின் 132-வது பிரிவு 1961 ஆம் ஆண்டு சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர்.

நேற்று இரவு தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 4.50 மணிக்கு முடிந்தது. இதேபோல் வலசுப்பட்டியை சேர்ந்த மற்றொருவர், கோட்டைப்பட்டியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் விடிய, விடிய சோதனை நடந்தது. ஆனால் அங்கு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த சோதனையையொட்டி வலசுப்பட்டியில் மணப்பாறை டி.எஸ்.பி. பிருந்தா தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »