Press "Enter" to skip to content

கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு தீ வைப்பு- தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு தீ வைத்த கும்பலை கைது செய்ய கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி தலைவர்களின் சிலைகள் அனைத்தும் துணியால் மூடி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாதவச்சேரி பகுதியில் உள்ள அண்ணா சிலையும் துணியால் மூடி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அண்ணாசிலைக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. இதனால் சிலையை மூடி மறைத்து வைக்கப்பட்ட துணி எரிந்து சாம்பல் ஆனது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

நேற்று காலையில் அந்த பகுதிக்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் சிலர் அண்ணா சிலை புகைபிடித்து கருமையான நிறத்துடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்து அங்கே தி.மு.க.வினர் திரண்டனர்.

பின்னர் சிலைக்கு தீ வைத்த கும்பலை கைது செய்யக்கோரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி துணை காவல் துறை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் கச்சிராயப்பாளையம் காவல் துறை ஆய்வாளர் காமராஜ் மற்றும் காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அண்ணா சிலைக்கு தீ வைத்த கும்பலை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றனர். பின்னர் இது தொடர்பாக புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் இதுதொடர்பாக கச்சிராயப்பாளையம் காவல் துறை நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அண்ணா சிலைக்கு தீ வைத்த கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் தீ வைக்கப்பட்ட அண்ணா சிலையை வருவாய்த்துறை ஊழியர்கள் சுத்தம் செய்து மீ்ண்டும் துணியால் மூடினர்.

அண்ணாசிலைக்கு மர்ம கும்பல் தீ வைத்த சம்பவம் மாதவச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »