Press "Enter" to skip to content

144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது- புதுவை மாவட்ட ஆட்சியர் விளக்கம்

புதுவை மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் 144 தடை உத்தரவு குறித்து விளக்கம் அளித்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து நேற்று இரவு 7 மணி முதல் வருகிற 7-ந் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் பிறப்பித்துள்ளார்.

இதன்படி தேர்தல் நிமித்தமாக சட்டவிரோதமான வகையில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், ஆயுதங்கள் கம்புகள் மற்றும் சுவரொட்டிகள் வைத்திருத்தல், கோ‌ஷங்களை எழுப்புதல், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துதல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது

இந்த 144 தடை உத்தரவு சட்டவிரோதமானது என்றும், இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் அவசர வழக்கு தொடுத்தார்.

இதில், புதுவையில் பொதுமக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் யாருமே ஒன்று கூட கூடாது என தேர்தலுக்கு முன்பாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருப்பது உண்மையான ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கூறப்பட்டிருந்தது.

விடுமுறை தினமான நேற்று மாலை காணொளி வயிலாக இந்த அவசர வழக்கை சென்னை உயர்நீதிநீதி மன்றம் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் அமைதியான சூழல் நிலவும் போது 144 தடை உத்தரவு பிறப்பித்து இருப்பது வெளிப்படையான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு முரண்பட்டதாகும் என்றும், தடை உத்தரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

எனவே, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்

அரசு சார்பில் ஆஜரான வக்கீல் தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 144 தடை உத்தரவு போடப்பட்டதற்கு அரசு தரப்பில் உரிய காரணமும், விளக்கமும் அளிக்கவில்லை. பொத்தாம் பொதுவாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க இயலாது.

எனவே, 144 தடை உத்தரவு எந்தெந்த காரணங்களுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் இந்த உத்தரவை ரத்து செய்ய நேரிடும் என எச்சரித்து வழக்கை முடித்து வைத்தனர்

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் 144 தடை உத்தரவு குறித்து விளக்கம் அளித்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், 144 தடை உத்தரவு வாக்களிப்பதை பாதிக்காது. கூட்டமாக சென்றோ, உறவினர்கள், நண்பர்களுடன் சென்றோ வாக்களிப்பதற்கு எந்தவித தடையும் இல்லை என்று கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »