Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பூசி போட சுகாதார பணியாளர்கள் பெயர் பதிவு செய்வதில் புதிய நடைமுறை – மத்திய அரசு திடீர் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது. முதலில், சுகாதார பணியாளர்களுக்கும், பின்னர், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

புதுடெல்லி:

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சுகாதார பணியாளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்வதில் புதிய நடை முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது. முதலில், சுகாதார பணியாளர்களுக்கும், பின்னர், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பிறகு, 60 வயதை கடந்தவர்களுக்கும், 45 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி விரிவுபடுத்தப்பட்டது.

இதற்கிடையே, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சில கொரோனா தடுப்பூசி மையங்களில், தகுதியற்ற சிலர் சுகாதார பணியாளர்கள் என்றும், முன்கள பணியாளர்கள் என்றும் பதிவு செய்துகொண்டு, தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்கள் கிடைத்தன. இது முற்றிலும் விதிமீறல் ஆகும்.

இதுபற்றி கொரோனா தடுப்பூசி பணிக்கான தேசிய நிபுணர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த குழு அளித்த சிபாரிசுப்படி, புதிதாக சுகாதார, முன்கள பணியாளர்களின் பெயர்களை பதிவு செய்வதை உடனடியாக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 45 மற்றும் 45 வயதை கடந்தவர்களுக்கான பதிவுகள், ‘கோவின்’ இணையதளத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

ஆனால், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட சுகாதார, முன்கள பணியாளர்கள் பெயர் பதிவு செய்யும் பணி, அரசாங்க கொரோனா தடுப்பூசி மையங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

பெயர்களை பதிவு செய்ய சுகாதார, முன்கள பணியாளர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டையையும், பணியிட சான்றிதழ் நகலையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

பணியிட சான்றிதழின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பொறுப்பாகும்.

அரசாங்க கொரோனா தடுப்பூசி மையத்தில் உள்ள ஆவண சரிபார்ப்பு ஊழியர், மேற்கண்ட அடையாள அட்டை மற்றும் பணியிட சான்றிதழ் விவரங்களை ‘கோவின்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »