Press "Enter" to skip to content

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி- தமிழக அரசு உத்தரவு

பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கு போதிய ஆர்வம் இல்லாமல் இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பலர் தாமாகவே முன் வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 41 லட்சத்து 72 ஆயிரத்து 963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட 14 லட்சத்து 11 ஆயிரத்து 194 பேரும், 45 வயதுக்கு மேற்பட்ட 13 லட்சத்து 93 ஆயிரத்து 811 பேரும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கப்பட்டது. இதையடுத்து நாளை வரை 3 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இன்று நேரடியாக சென்று தடுப்பூசிகளை போட்டனர். நாளையும் இந்த பணி தொடர்கிறது.

இந்த நிலையில் அடுத்த 10 நாளில் வருகிற 25-ந்தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கி உள்ள தடுப்பூசி திருவிழாவை பயன்படுத்தி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டனர் என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். இதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு தடுப்பூசிகளை கையிருப்பு வைக்க அறிவுறுத்தி உள்ளோம்.

இதனை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டு செயல்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 10 சதவீதம் பேரே தாங்களாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கு போதிய ஆர்வம் இல்லாமல் இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பலர் தாமாகவே முன் வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

இதனை அதிகப்படுத்த வாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரங்களையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். வருகிற 25-ந்தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்பதை அந்தந்த பகுதியைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் உறுதி எடுத்து செயல்படுத்த கேட்டுக்கொண்டுள்ளோம்.

மத்திய அரசின் வழி காட்டுதலை பின்பற்றி சுகாதாரத்துறை வாகனங்களில் அனைத்து இடங்களுக்கும் சென்று போதுமான சுகாதாரப் பணியாளர்களை வைத்து தடுப்பூசி போடும் பணிகளை 100 சதவீதம் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி அச்சத்தை போக்குவதற்காக கலை நிகழ்ச்சிகள் மூலம் பிரசாரங்களை தீவிரமாக மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »