Press "Enter" to skip to content

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு பரிசளிப்பதில் என்ன பயன்? – பிரதமருக்கு பஞ்சாப் முதல்வர் கேள்வி

இந்தியா முழுவதும் நேற்றைய நிலவரப்படி 12 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

சண்டிகர்:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை அதிதீவிரம் அடைந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட தகவலில் நாட்டில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா புதிதாக பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 609 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, உலகின் பல நாடுகளுக்கு இந்தியா லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசிகளை நல்லெண்ண அடிப்படையில் இலவசமாக வழங்கியது. ஆனால், தற்போது உள்நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், பஞ்சாப் மாநில முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை மற்ற நாடுகளுக்கு பரிசளிப்பதில் என்ன பயன்? நமது நிலைமை என்ன? இந்தியர்களின் நிலை என்ன? முதலில் நமக்கு தடுப்பூசி வேண்டாமா? நம்மிடம் அதிகமாக தடுப்பூசி இருந்தால் அவற்றை வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. 

ஆனால், நம்மிடம் குறைவாக தடுப்பூசி இருக்கும்போது அவற்றை மற்றவர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் கொடுக்கக் கூடாது. முதலில் இந்தியர்களுக்கு கொடுக்க வேண்டும். முதலில் எனக்கு கொரோனா தடுப்பூசி கொடுங்கள் என்று மாநில முதல் மந்திரிகளுடனான கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் நான் இவ்வாறு கூறினேன் என தெரிவித்தார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »