Press "Enter" to skip to content

தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை:

நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

சென்னையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்து விட்டது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் நாளை (20-ந்தேதி) முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொடர் வண்டிகள் மட்டும் அட்டவணைபடி ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள், வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவுநேர பஸ்களுக்கு தடை விதிக்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் இரவு நேரத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மாலை மற்றும் இரவு நேரங்களிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த நேரத்தில் தான் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இந்த இடங்களுக்கு செல்ல பயணநேரம் 10 மணி முதல் 12 மணிநேரம் வரை ஆகும். இரவு நேரத்தில் பஸ் போக்குவரத்துக்கு தடை இருப்பதால் இந்த பஸ்களை காலை நேரத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிலும் காலை நேரத்தில் கூடுதலாக பஸ்களை விட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். வெளி மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு இரவு 10 மணிக்குள் சென்று சேரும் வகையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

உதாரணமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல பயண நேரம் 5 மணி நேரம் ஆகும் நிலையில் காலையில் இருந்து மாலை 5 மணிவரை மட்டுமே சென்னையில் இருந்து திருச்சிக்கு பேருந்துகள் இயக்கப் படும். மாலை 5 மணிக்கு புறப்படும் பஸ் இரவு 10 மணிக்குள் திருச்சியை அடைந்துவிடும்.

இதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு பயண நேரம் 10 முதல் 12 மணி நேரம் வரை ஆகும் என்பதால் அதற்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்களும் இரவு 10 மணிக்குள் அந்தந்த இடங்களை சென்று சேரும் வகையில் இயக்கப்பட உள்ளன.

குறிப்பாக இந்த மாவட்டங்களுக்கு காலை நேரங்களில் அதிக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக நீண்ட தூர பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் இதற்கு முன்பு இரவு நேரங்களில் மட்டுமே பயணம் செய்து வந்தார்கள். இனி அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல பகல் நேரத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ் களும் இதுவரை இரவு நேரத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. சராசரியாக தினமும் 800 முதல் 1000 ஆம்னி பேருந்துகள் வரை இயக்கப்பட்டு வருகின்றன.

இரவுநேர ஊரடங்கு காரணமாக ஆம்னி பஸ் போக்குவரத்து முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆம்னி பஸ்களையும் காலை நேரத்திலேயே இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இனி நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் நாட்கள் வரை ஆம்னி பஸ்களும் கோயம்பேட்டில் இருந்து காலையிலேயே இயக்கப்பட உள்ளன. தினமும் பாதி எண்ணிக்கையில் அதாவது 400 ஆம்னி பேருந்துகள் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆம்னி பஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி முடிவு எடுத்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »