Press "Enter" to skip to content

இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் அனைத்து விமானங்களும் ரத்து

அதிகரித்து வரும் கொரோனா தொற்று எதிரொலியாக, பல்வேறு நாடுகள் இந்தியாவை சிவப்பு பட்டியலில் சேர்த்து விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.

யுஏஇ:

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவுகிறது. இதன் காரணமாக கொரொனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு உலக நாடுகள் இந்தியாவிற்கு விமானப் போக்குவரத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து நாடு கொரோனா அச்சத்தில் இந்தியாவை சிவப்பு பட்டியலில் சேர்த்து போக்குவரத்துக்கு தடை விதித்தது. இங்கிலாந்து நாட்டை தொடர்ந்து ஹாங்காங் நாடும் இந்தியா மீது பயண தடையை விதித்தது. அதனை தொடர்ந்து வளைகுடா நாடுகளான ஓமன் மற்றும் சவுதி அரேபியாவும் காலவரையற்று இந்தியா மீது பயண தடை விதிப்பதாக அறிவித்தன.

இந்நிலையில், அமீரக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வரும் 24-ம் தேதி (நாளை) நள்ளிரவு 11.59 மணி முதல் அடுத்த 10 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்தியா வழியாக வேறு நாடுகளில் இருந்து பயணம் மேற்கொண்டாலும் அமீரகம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமீரக குடியுரிமை பெற்றவர்கள், தூதரக பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் மற்றும் அரசுமுறை பயணமாக வருகை புரிபவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வருகை புரிபவர்கள் 48 மணி நேரம் செல்லுபடியாகத்தக்க பிசிஆர் பரிசோதனை முடிவுகளை கியூ.ஆர் கோட் உடன் கூடிய சான்றிதழாக பெற்று வர வேண்டும்.

அவ்வாறு விலக்கு அளிக்கப்பட்டு வருகை தருபவர்கள் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 10 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்கள் அமீரகத்துக்குள் வருகை புரிந்த 4-வது நாள் ஒருமுறை கொரோனா பரிசோதனையும், 8-வது நாள் இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். சரக்கு விமானங்கள் வழக்கமாக செயல்படும். அறிவிக்கப்பட்ட 10 நாள் விமான சேவை ரத்தானது மேலும் நீட்டிப்பு செய்யப்படலாம்.

ஆனால் அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் விமானங்கள் வழக்கம்போல செல்லும் என தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று மாலை எமிரேட்ஸ், எதிகாத், பிளைதுபாய் மற்றும் ஏர் அரேபியா ஆகிய தேசிய விமான நிறுவனங்கள் தங்கள் இணைய தளங்களில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »