Press "Enter" to skip to content

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? -அனைத்து கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்படும்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை சுனாமியை போன்று வேகமாக தாக்கி வருகிறது. கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தால், அவர்களுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுகிறது. சிரமமில்லாமல் சுவாசிக்க அவர்களுக்கு ஆக்சிஜன் செயற்கையாக அளிக்க வேண்டியுள்ளது.

ஆனால், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடாக உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் அடைக்கப்பட்டு கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம், எங்களுக்கு அனுமதி வழங்கினால் ஆக்சிஜன் தயாரித்து வழங்க தயாராக இருக்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டது. அதே நேரத்தில், மத்திய அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று யோசனை வழங்கியது. சுப்ரீம் நீதிமன்றம் தலைமை நீதிபதியும் இதே கருத்தை வலியுறுத்தினார்.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து, இந்த வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை செயலாளர், சுற்றுச்சூழல் துறை செயலாளர், தொழிலாளர் நலத்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்படும். மேலும், கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »