Press "Enter" to skip to content

வெங்கையா நாயுடு டுவிட்டர் கணக்கில் மீண்டும் நீல நிற ‘டிக்’

இந்தியாவில் கடந்த மாத நிலவரப்படி 1.7 கோடி பேர் டுவிட்டரை பயன்படுத்துகிறார்கள். இதில் சமூக, அரசியல் கருத்துக்களை, நிகழ்வுகளை பதிவு செய்கிறார்கள்.

புதுடெல்லி:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் டுவிட்டர்கணக்கில் இருந்து பிரபலங்களை அடையாளப்படுத்தும் நீல நிற ‘டிக்’ நீக்கப்பட்டது சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து மீண்டும் அந்த நீல நிற ‘டிக்’ சேர்க்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் டுவிட்டருக்கு என்று ஒரு இடம் இருக்கிறது. அரசியல்தலைவர்கள் தொடங்கி திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பல்துறை பிரபலங்கள் என பலரும் டுவிட்டர்கணக்கு வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் கடந்த மாத நிலவரப்படி 1.7 கோடி பேர் டுவிட்டரை பயன்படுத்துகிறார்கள். இதில் சமூக, அரசியல் கருத்துக்களை, நிகழ்வுகளை பதிவு செய்கிறார்கள்.

இந்த தளத்திில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை அடையாளப்படுத்துவதற்கு நீல நிற ‘டிக்’ குறியீட்டை டுவிட்டர் பயன்படுத்தி வருகிறது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனிப்பட்ட முறையில் ஒரு டுவிட்டர் கணக்கு வைத்துள்ளார். இந்த கணக்கை அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதிக்கு பிறகு பயன்படுத்தாமல் இருந்து வந்தார். அதற்குப் பதிலாக துணை ஜனாதிபதி என்ற அடிப்படையில் அமைந்த டுவிட்டர் கணக்கை பயன்படுத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று திடீரென வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் இருந்து பிரபலங்களைஅடையாளப்படுத்த பயன்படுத்தி வந்த நீல நிற ‘டிக்’ குறியீட்டை டுவிட்டர் நீக்கி விட்டது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் டுவிட்டர் நடவடிக்கைகளுக்கு எதிராக பதிவுகளை வெளியிட்டனர்.

வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் இருந்து நீல நிற ‘டிக்’ குறியீட்டை நீக்கியதாக தகவல் அறிந்ததும் அதிகாரிகள், டுவிட்டர் சமூக வலைத்தள நிறுவனத்துடன் தொடர்பு கொண்டனர்.

இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு டுவிட்டர் பணிந்து உடனடியாக அந்த நீல நிற ‘டிக்’ குறியீட்டை வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் சேர்த்தது. இதனால் ஒரே நாளில் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து டுவிட்டர் கூறுகையில், “இந்த டுவிட்டர் கணக்கு கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது சரிபார்க்கப்பட்ட பேட்ஜ் (நீல நிற ‘டிக்’ குறியீடு) மீட்டமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தது. வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை 13 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »