Press "Enter" to skip to content

பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க குழு அமைப்பதற்கு பட்டியல் தயாரிப்பு

கொரோனா 3-வது அலை வரவாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால், அது பாதிப்பை அதிகரிக்க செய்துவிடும் என்று நிபுணர் குழுவினர் எச்சரித்தனர்.

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடக்க இருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் இதே காரணத்துக்காக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்தன.

தமிழகத்திலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் விடப்பட்டன. 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவது தொடர்பான நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி கல்வித்துறை உயர் அதிகாரிகள், நிபுணர் குழுவினர், மனநல மருத்துவர்கள் ஆகியோருடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்கள். இதைதொடர்ந்து தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

கொரோனா 3-வது அலை வர வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால், அது பாதிப்பை அதிகரிக்க செய்துவிடும் என்று நிபுணர் குழுவினர் எச்சரித்தனர். மேலும் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்தே தமிழக அரசு பிளஸ்-2 தேர்வை ரத்து செய்துள்ளது. பிளஸ்-2 மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்… தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பிளஸ்-2 மாணவர்கள் அடுத்து உயர் படிப்புகளில் சேர்வதற்கு வசதியாக விரைவில் மதிப்பெண் பட்டியல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தேர்வு நடைபெறாத நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது மிகப்பெரிய சவாலான ஒன்றாக உள்ளது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் போது எதை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இவற்றை ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்க தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.

அந்த குழுவில் உயர் கல்வித்துறைச் செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 முதல் 10 பேர் கொண்ட குழுவாக இது அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழுவை தேர்வு செய்வதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மிகச்சிறந்த கல்வியாளர்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. அது போல மாணவர்கள் நலனில் மிகச்சிறப்பாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பெயர்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த பட்டியலின் அடிப்படையில் யார்- யாரை எல்லாம் குழுவில் சேர்ப்பது என்பது முடிவு செய்யப்படும். அதன் பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்படும்.

இந்த குழு தொடர்பான தகவல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழு அமைக்கப்பட்டதும் அவர்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை ஆய்வு செய்வார்கள்.

மாணவிகள்

பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் இதுதொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும். மற்ற மாநிலங்களில் பிளஸ்-2 மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்படும்.

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் மாணவர்களின் முந்தைய தகுதி நிலவரங்களும் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கலாமா என்பதும் ஆய்வு செய்யப்படும்.

இதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதும் அவை தொகுக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்படும். அந்த அறிக்கையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆசிரியர் குழுவினர் சமர்ப்பிப்பார்கள். அதன் பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படுகிறது என்ற முழு விவரமும் தெரியவரும்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை முடிவு செய்யும் போது அவர்கள் 11-ம் வகுப்பில் எந்த அளவுக்கு மதிப்பெண்களை எடுத்து இருந்தனர் என்பதையும் ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர். இந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மாணவர்கள் எப்படி தகுதி பெற்று இருந்தனர் என்பதும் ஆய்வு செய்யப்படும்.

10-ம் வகுப்பு தேர்வின் போது பெற்ற மதிப்பெண்களையும் கருத்தில் கொள்ள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிளஸ்-2 மாணவர்கள் பெறும் மதிப்பெண் தான் அவர்களது எதிர்காலத்துக்கான உயர்கல்வி வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால் இதில் கவனமுடன் செயல்பட தமிழக அரசு தீவிரமாக உள்ளது.

எனவே பிளஸ்-2 மாணவர்களுக்கு எந்தவித குறையும் இல்லாமல் அவர்களது தகுதிக்கு ஏற்ப உரிய மதிப்பெண்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »