Press "Enter" to skip to content

பீட்சா, பர்கரை வீடு தேடிச்சென்று அளிக்கையில் ரேஷன் பொருளை வீட்டில் கொடுக்கக்கூடாதா? – மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி

தலைநகர் டெல்லியில் ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும் திட்டத்தை கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அறிவித்திருந்தது.

புதுடெல்லி:

டெல்லியில் ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்து இருந்தது. ஆனால், அத்திட்டத்தை ஆளுநர் நேற்று முன்தினம் நிராகரித்தார். மத்திய அரசின் ஒப்புதலை பெறவில்லை என்றும், திட்டத்துக்கு எதிரான வழக்கு உயர்நீதிநீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரேஷன் பொருட்களை வீட்டுக்கேச் சென்று வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற தேவையில்லை. ஏதேனும் சர்ச்சை எழக்கூடாது என்பதால்தான், மத்திய அரசிடம் அனுமதி கேட்டோம்.

அப்படி இருந்தும் டெல்லியில் இத்திட்டத்தை நிறுத்தியது ஏன்? ஞாயவிலைக்கடைகள், கொரோனாவை பரப்பும் இடங்களாக மாறிவிடக்கூடாது. ஆகவே, டெல்லியில் மட்டுமின்றி நாடு முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பீட்சா, பர்கர், திறன்பேசி, ஆடைகள் போன்றவற்றை வீடு தேடிச்சென்று கொடுக்கும்போது ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று கொடுக்கக் கூடாதா? இதனால் டெல்லியில் 72 லட்சம் பேர் பலன் அடைவார்கள். ரேஷன் மாபியாவையும் ஒழிக்க முடியும்.

மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், டெல்லி என மாநில அரசுகளுடனும், விவசாயிகளுடனும், லட்சத்தீவு மக்களுடனும் மத்திய அரசு மோதி வருகிறது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இப்படி இருந்தால், கொரோனாவை எப்படி வீழ்த்த முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »