Press "Enter" to skip to content

பெருந்தலைவர் காமராஜருக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லம், மணிமண்டபம் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே அவரது உருவப்படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை அரசின் சார்பில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதும் காமராஜரின் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், அமைச்சர்கள் பொன்முடி, வெள்ளக்கோவில் சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், தா.மோ.அன்பரசன், சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, தமிழச்சி தங்கபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் மற்றும் உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினார்கள்.

காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லம், மணிமண்டபம் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

நூற்றாண்டு மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு இன்று காலை கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நாடார் மகாஜன சங்கம் சார்பில் சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித் திருவிழா கொண்டாடப்பட்டது. தொழில் அதிபர் ஏ.பி. செல்வராஜன் தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி. விழாவில் பங்கேற்று காமராஜர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்களை அவர் வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர். சீனிவாசன், தங்கப்பாண்டியன், சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நாடார் மகாஜன சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் காமராஜர் நினைவு இல்லத்தில் பெண்கள் நோட்டு புத்தகங்களை வைத்து மரியாதை செய்தனர்.

இதையும் படியுங்கள்… மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் மகத்தான தலைவர்… இன்று காமராஜர் பிறந்தநாள்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »