Press "Enter" to skip to content

சென்னையில் நூதன முறையில் ரூ.100 கோடி மோசடி

ரூ.1 லட்சம் கட்டினால் மாதம் ரூ.15 ஆயிரம் கிடைக்கும் என்று ஆசை காட்டி பொதுமக்களிடம் நூதன முறையில் ரூ.100 கோடி மோசடி செய்த புகாரில் தனியார் நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை:

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதற்கிணங்க பல மோசடி மன்னர்கள் வலம் வருகிறார்கள். ஒரு வழக்கில் ஜெயிலுக்கு போய்விட்டு, மீண்டும் வெளியில் வந்து அதே மோசடியை இடத்தை மாற்றி செய்கிறார்கள். அப்போதும் பொதுமக்கள் இவர்களிடம் மோசம் போய்விடுவதுதான் சோகம்.

இந்த மோசடி மன்னர்கள் வரிசையில், சிவன் நரேந்திரன் என்பவர் தற்போது போலீசிடம் சிக்கி உள்ளார். இவர் சென்னை ஓட்டேரி, திருமுல்லைவாயல், திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் போன்ற இடங்களில் ரபோல் கணினி மயமான என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் தரப்படும் என்றும், 2 ஆண்டுகள் முடிந்தவுடன் முதலீட்டு தொகையும் திருப்பித்தரப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த ஆசை வலையில் சிக்கிய பொதுமக்கள் பலர் ரபோல் கணினி மயமான நிறுவனத்தில் முதலீட்டு தொகையை லட்சம் லட்சமாக கொட்டினார்கள். கடந்த 3 ஆண்டுகளில் இவரது நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் கோடிகளை கொட்டி முதலீடு செய்தார்கள்.

இப்படி பண மழையில் நனைந்த சிவன் நரேந்திரன், அறிவித்தபடி 10 மாதங்கள் மாதந்தோறும் ரூ.1 லட்சத்துக்கு ரூ.15 ஆயிரம் வீதம் திருப்பி கொடுத்தார். அதன் பிறகு இந்த பணத்தை கொடுப்பதை நிறுத்திவிட்டார். பொதுமக்கள் இவரிடம் முதலீட்டு தொகையை திருப்பி கேட்டனர். ஒரு சிலருக்கு முதலீட்டு தொகையை திருப்பி கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் முதலீட்டு தொகையை கொடுக்காமல், நிறுவனத்தை மூடிவிட்டார்.

முதலீட்டு தொகையை இழந்த பொதுமக்கள் சென்னை கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்தனர். ஆயிரம் பேர் வரை புகார் கொடுத்தனர். இதன் மூலம் சிவன் நரேந்திரன் ரூ.100 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூடுதல் காவல் துறை டி.ஜி.பி.அபய்குமார் சிங் உத்தரவிட்டார். அதன்படி ஐ.ஜி. தீபக்குமார் மோடக், சூப்பிரண்டு பழனிகுமார் ஆகியோர் மேற்பார்வையில், துணை சூப்பிரண்டு சம்பத் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதன்மூலம் ரபோல் கணினி மயமான நிறுவனத்தின் அதிபர் சிவன் நரேந்திரன் கைது செய்யப்பட்டார். அவரது வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டது. வங்கிக்கணக்கில் ரூ.4½ கோடி அளவுக்கு மட்டுமே பணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து மேலும் சிலரை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதில் பணத்தை இழந்த பொதுமக்கள் கிண்டியில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுக் கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நூதன முறையில் ரூ.100 கோடி வரை மோசடி செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »