Press "Enter" to skip to content

நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்- விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய அரசியல் கட்சியினர்

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்படி விவசாய சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

புதுடெல்லி:

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு (பாரத் பந்த்) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. விவசாய சங்கங்கள் இணைந்த ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெறுகிறது. 
முழு அடைப்புபோராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு கொடுத்துள்ளார். இது தவிர பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், மற்றும் வணிக நிறுவனங்களை மூடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்படி விவசாய சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதன்படி பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

ஆங்காங்கே விவசாய சங்கத்தினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் இருந்து காசிப்பூர் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. டெல்லி-அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுவையில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. திருவனந்தபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கர்நாடக மாநிலம் கலபுரகி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »